| ADDED : பிப் 07, 2024 11:44 PM
பொன்னேரி:மீஞ்சூர் அடுத்த காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தர், 22. அதே பகுதியை சேர்ந்தவர் மன்னன், 30. இருவரும் மீஞ்சூர் அடுத்த மேலுாரில் உள்ள தனியார் 'கன்டெய்னர் யார்டில்' பணிபுரிந்து வருகின்றனர். நேற்று காலை இருவரும் வேலையில் இருந்த போது, ஆயுதங்களுடன் அங்கு வந்த நான்கு பேர் கும்பல், சவுந்தரின் தலை மற்றும் முதுகில் சரமாரியாக வெட்டியது. தடுக்க முயன்ற மன்னனின் இடது சுண்டு விரல் துண்டித்ததுடன், இடது பக்க தாடையிலும் வெட்டிவிட்டு, கும்பல் தப்பியது. இதையடுத்து, படுகாயமடைந்த இருவரையும் மீட்ட சக தொழிலாளர்கள், சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மீஞ்சூர்போலீசார் வழக்கு பதிந்தனர். போலீசாரின் விசாரணையில், கள்ளக்காதல் விவகாரத்தால், சவுந்தரை கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டது, காட்டூர் பகுதியைச் சேர்ந்த அருண், வினோத், கார்த்திக் மற்றும் குட்டி என்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.