உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ஏரியில் வண்டல் மண் எடுக்க அரசு அளித்த அனுமதி...கண் துடைப்பு!: காலம் கடந்த அறிவிப்பால் பயனில்லை என புகார்

ஏரியில் வண்டல் மண் எடுக்க அரசு அளித்த அனுமதி...கண் துடைப்பு!: காலம் கடந்த அறிவிப்பால் பயனில்லை என புகார்

திருவாலங்காடு:திருவள்ளூர் மாவட்டத்தில் ஏரிகளில் வண்டல் மண் எடுக்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. காலம் தாழ்ந்த இந்த அறிவிப்பால், எந்த பயனும் இல்லை. தற்போது பெரும்பாலான ஏரிகளில் நீர் உள்ளதால், விவசாயிகள் புலம்புகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் பொன்னேரி, திருவள்ளூர், திருத்தணி ஆகிய மூன்று வருவாய்க் கோட்டங்களும் ஒன்பது வட்டங்களும் அமைந்துள்ளன. மாவட்டம் முழுதும், 1,436 ஏரிகள் உள்ளன. இதில், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் 787 ஏரிகள், ஒன்றிய நிர்வாக கட்டுப்பாட்டில் 649 ஏரிகள் உள்ளன. தவிர 2,000த்துக்கும் மேற்பட்ட சிறு குளம், குட்டைகள் உள்ளன. இதில் பெரும்பாலான ஏரி, குளங்களின் நீரை நம்பியே பாசனம் நடைபெறுகின்றன.திருவள்ளூர் மாவட்டம், 3,422 ச.கி.மீட்டர் பரப்பளவைக் கொண்டது. மொத்த மக்கள் தொகையில், 56 சதவீதம் பேர் விவசாய தொழிலை நம்பியுள்ளனர். கொசஸ்தலை, ஆரணி, கூவம் ஆகிய முக்கிய ஆறுகள் ஓடுகின்றன. நெல், கம்பு, ராகி போன்ற தானியங்கள், பருப்பு வகைகள், கரும்பு, வேர்க்கடலை ஆகிய பயிர்கள் அதிகம் பயிரிடப்படுகின்றன. எள் போன்ற எண்ணெய் பயிர்கள், காய்கறி, பழம் மற்றும் பூக்களும் கணிசமாக உற்பத்தியாகின்றன.மாவட்டத்தில் 2 லட்சத்து 50,000 ஏக்கர் விவசாய நிலத்தில் நெல் பயிரிடப்படுகிறது.அதேபோன்று கரும்பு, வேர்க்கடலை, பூக்கள், மிளகாய் உள்ளிட்ட அடுத்தப்படியாக பயிரிடப்படுகின்றன. இந்நிலையில் நீர் இருப்பை உறுதி செய்ய, கடந்த சில ஆண்டுகளாக ஏரியில் இருந்து மண்ணை எடுக்க தடை விதிக்கப்பட்டிருந்ததால், விவசாயிகள் அதிருப்தியடைந்து இருந்தனர்.இந்நிலையில் 'தமிழகத்தில் குளம், ஏரி உள்ளிட்ட நீர் நிலைகளில் வண்டல் மண் விவசாயிகள் எடுத்துக் கொள்ளலாம்' என, ஜூன் மாதம் அரசு அறிவித்தது.இந்த அறிவிப்பு வெளியானது விவசாயிகள் மற்றும் மண்பாண்டம் செய்வோர் மத்தியில் மகிழ்ச்சியைஏற்படுத்தியது. ஆனால், இந்தாண்டு மழை ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே பெய்ததால், பல ஏரிகளில் நீர் நிரம்பின. இதனால் முதல்வரின் வண்டல் மண் எடுத்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு பலனற்று போனதாக விவசாயிகள் புலம்புகின்றனர்.வருவாய் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழக அரசு அறிவித்துள்ள படி, விவசாயிகளின் நலன் கருதி ஏரியின் நீர் இருப்பு குறைவாக உள்ளபோது, ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதி உள்ளது. திருவள்ளூர், திருத்தணி, பூண்டி உள்ளிட்ட வட்டாரங்களில் கோரிக்கை வரப்பெற்றுள்ளது. உரியவர்களுக்கு அனுமதி வழங்கப்படும். விவசாயிகள் தங்கள் விளை நிலத்திற்கு மட்டுமே ஏரியில் இருந்து எடுக்கும் மண்ணை பயன்படுத்த வேண்டும். தேவையான அளவுக்கு எடுத்துக்கெள்ளலாம். அடுத்தாண்டு முன் கூட்டியே அனுமதிப்பது குறித்து உயரதிகாரிகள் முடிவு செய்வர். இவ்வாறு அவர் கூறினார்.ஏரியில் வண்டல் மண் எடுக்க, உரிய காலம் ஏப்., இறுதி முதல் மே வரை அப்போது தான் ஏரியில் நீர் முழுதும் வற்றி இருக்கும். அதேபோன்று ஏரிக்குள் சென்று மண் எடுத்தால், வாகனங்கள் சென்று வர வசதியாக இருக்கும். ஆனால், அப்போது அனுமதி வழங்காமல் ஒவ்வொரு ஆண்டும் காலம் தாழ்த்தி ஜூன் மாதம் கொடுக்கின்றனர். அப்போது மழை பெய்து விடுகிறது. ஏரியில் நீர் இருக்கும் போது விவசாயிகளால் எப்படி மண் அள்ள முடியும். எனவே இது அரசின் கண்துடைப்பு அறிவிப்பு. இதில் யாரும் பயனடைந்ததாக எங்களுக்குத் தெரியவில்லை. விவசாயிகள் இதில் பயனடைய வேண்டும் என்றால், வரும் ஆண்டில் ஏப்ரல் இறுதியில் அறிவிப்பை வெளியிட வேண்டும். வே.பாலமுருகன், விவசாயி, திருவள்ளூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி