பொன்னேரி அகத்தீஸ்வரர் கோவிலில் பாலாலயம்
பொன்னேரி:பொன்னேரி, அகத்தீஸ்வரர் கோவிலில் திருப்பணிகள் மேற்கொண்டு கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டு, அதற்கான பாலாலயம் நடந்தது. பொன்னேரி, ஆனந்தவல்லி தாயார் சமேத அகத்தீஸ்வரர் கோவில், 1,000 ஆண்டுகள் பழமையானது. இக்கோவிலில் நீண்டகாலமாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்ததால், பக்தர்கள் அதிருப்தியில் இருந்து வந்தனர். இதையடுத்து, கோவில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குழுவினர் கோவிலில் திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்த திட்டமிட்டனர். அதற்கான பாலாலய பூஜை நேற்று விமரிசையாக நடந்தது. அத்தி மர பலகைகள், அகத்தீஸ்வரர் மற்றும் பரிவார மூர்த்திகளின் உருவங்கள் வரைந்து, அவற்றிற்கு புனித நீர் ஊற்றி, சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, சிறப்பு தீபாராதனையும் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். கோவில் கோபுரங்கள், சுற்றுச்சுவர், சன்னிதிகள் ஆகியவை புனரமைப்பதற்கான திருப்பணிகள் உடனடியாக துவங்கி, விரைவாக பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடத்த கோவில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.