ஊத்துக்கோட்டை : அதிகளவு பயணிகளை ஏற்றிக் கொண்டு, அசுர வேகத்தில் சென்ற
ஷேர் ஆட்டோ, கட்டுப்பாட்டை இழந்து, முன்னே சென்ற பைக் மீது மோதிய
விபத்தில், ஐந்து பேர் காயமடைந்தனர்.தமிழக - ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது
ஊத்துக்கோட்டை. சுற்று வட்டாரத்தில் அதிகளவு கிராமங்களை உள்ளடக்கிய
இப்பகுதியில் போதிய அரசு பஸ் இயக்கப்படாததால், ஆந்திராவைச் சேர்ந்த,
உரிமம் இல்லாத ஷேர் ஆட்டோக்கள் பெருகி விட்டன.இவர்கள், பணம் சம்பாதிக்கும்
நோக்கில், அதிக பயணிகளை ஏற்றி, வேகமாக செல்கின்றனர். நேற்று முன்தினம்
ஊத்துக்கோட்டையில் இருந்து, ஆந்திர மாநிலம் சுருட்டப்பள்ளி நோக்கி,
15க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற ஷேர் ஆட்டோ, கட்டுப்பாட்டை இழந்து,
முன்னே சென்ற பைக் மீது மோதியது.இதில், பைக்கில் சென்ற சுருட்டப்பள்ளி
கிராமத்தைச் சேர்ந்த வேலன், 41, மற்றும் ஷேர் ஆட்டோவில் பயணம் செய்த
சிறுவானூர் காலனியைச் சேர்ந்த மல்லிகா, 35, பேரடம் லட்சுமய்யா, 24,
செல்லம்மாள், 65 மற்றும் சிறுனம்புதூர் ஆஷிப், 11, ஆகிய ஐந்து பேர், பலத்த
காயமடைந்தனர். இதில், மல்லிகா, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கும், வேலன்,
சென்னை அரசு மருத்துவமனைக்கும் மற்றவர்கள் ஊத்துக்கோட்டை அரசு
மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். ஊத்துக்கோட்டை போலீசார்
விசாரிக்கின்றனர்.