திருத்தணி : நகராட்சியில், கழிவுநீர் கால்வாய் சீரமைக்கப்படாததால், கழிவுநீருடன் மழைநீர், சாலையில் செல்கிறது. இதனால், தெருக்களில் நடமாட முடியாமல் பொதுமக்கள் கடும் அவதிப்படுகின்றனர். திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகள் உள்ளன. இங்கு 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். திருத்தணியை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து, பல்வேறு அத்தியாவசியப் பணிகள் காரணமாக திரளான மக்கள் நகருக்கு வந்து செல்கின்றனர். நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, கழிவுநீர் கால்வாய்கள் தினசரி தூர்வாருவதில்லை. ம.பொ.சி.சாலை, அரக்கோணம் சாலை, அக்கைய்ய நாயுடு சாலை, சித்தூர் சாலை, முருகப்ப நகர், பழைய தர்மராஜாகோவில் தெரு, சேகர்வர்மா நகர் மற்றும் என்.எஸ்.சி. போஸ் ரோடு ஆகிய இடங்களில் உள்ள கழிவுநீர் கால்வாய்களில், குப் பை அதிகளவில் சேர்ந்துள்ளது.இப்பகுதிகளில் நகராட்சி ஊழியர்கள் தினமும், கால்வாயை சுத்தம் செய்வது இல்லை. இதனால், அடிக்கடி கால்வாய் தூர்ந்து போகிறது. பலத்த மழை பெய்தால், மழைநீர் செல்வதற்கு கால்வாய் வசதியில்லாததால், மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் செல்கிறது. இதனால், அவ்வழியாக செல்லும் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். மழைநீருடன் கழிவுநீர் இரண்டாவது ரயில்வே கேட் வழியாக செல்வதால் அங்கு, சேறும் சகதியுமாக மாறிவிடுகிறது. இதனால் கேட்டை கடக்கும் பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.ஊழியர்கள் பற்றாக்குறை: நகராட்சியில், 39 துப்புரவு தொழிலாளர்கள் உள்ளனர். இதில் 23 பேர் மட்டும் பணிகளை மேற்கொள்கின்றனர்.
மற்றவர்கள் எலக்ட்ரீசியன், ஆழ்துளை குழாய்களை சரி பார்ப்பது ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். திருத்தணி நகரம் நாளுக்கு நாள் வளர்த்து வருவதாலும், தினமும் மக்களின் வருகை அதிகரித்து வருவதாலும் குப்பை அதிகளவில் சேருகிறது. ஊழியர்கள் பற்றாக்குறையால், தினசரி சேறும் குப்பையையும் அகற்ற முடியாமல் தவிக்கின்றனர். நகராட்சியில் உள்ள கழிவுநீர் கால்வாய்களையும் சீர்படுத்த முடிவதில்லை. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, நகராட்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது: ''கழிவுநீர் கால்வாய்களை தினமும் சீரமைப்பதற்கு போதிய ஆட்கள் பற்றாக்குறையால் ஒரு நாள் விட்டு, ஒரு நாள் சுத்தம் செய்யப்படுகிறது. மேலும் நகராட்சியில் கழிவுநீர் கால்வாய்களை சீரமைப்பதற்கு நகராட்சி கூட்டத்தில் சிறப்பு தீர்மானம் போட்டும், டெண்டர் விடப்பட்டு தற்போது சீரமைக்கும் பணி, துரித வேகத்தில் நடந்து வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் நகராட்சியில் உள்ள பெரும்பாலான கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்யப்படும். இனிவரும் காலங்களில் சாலையில் கழிவுநீருடன் மழைநீர் செல்வது முழுமையாக தடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.