திருத்தணியில் அனல் காற்றுடன் வெயில் கொளுத்துவதால் அவதி
திருத்தணி:அக்னி நட்சத்திரம் துவங்கும் முன்பே, 20 நாட்களாக திருத்தணியில் வெயில் அதிகரித்து வருகிறது. இதனால், நண்பகல் 11:00 - மாலை 5:00 மணி வரை மக்கள் வெளியே வருவதை தவிர்க்கின்றனர்.வீட்டில் உள்ள மின்விசிறியிலும் அனல் காற்று வீசுவதால் முதியோர்கள், குழந்தைகள் நிம்மதியாக துாங்க முடியாமல் கடும் சிரமப்படுகின்றனர். நேற்று, திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் அளவுக்கு அதிகமாக வெயில் கொளுத்தியது.அனல் காற்றுடன் வெயில் கொளுத்தியதால், பெரும்பாலான பக்தர்கள், மதிய நேரத்தில் திருத்தணி முருகன் கோவிலுக்கு வருவதை தவிர்த்தனர். மேலும், இருசக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.அக்னி நட்சத்திரம் துவங்குவதற்கு சில நாட்களே உள்ள நிலையில், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கு அச்சப்படுகின்றனர்.கோடை வெயில் அதிகரிப்பதால், தினமும் 3 - 5 லிட்டர் தண்ணீர் கட்டாயம் பருக வேண்டும். நண்பகல், 11:00 - மாலை 3:30 மணி வரை மக்கள் வெளியே நடமாட வேண்டாம் என, மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.