உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர்: புகார் பெட்டி; சாலையோரம் குவியும் குப்பை தொற்று நோய் பரவும் அபாயம்

திருவள்ளூர்: புகார் பெட்டி; சாலையோரம் குவியும் குப்பை தொற்று நோய் பரவும் அபாயம்

சாலையோரம் குவியும் குப்பை தொற்று நோய் பரவும் அபாயம்

திருமழிசை அடுத்துள்ளது வரதராஜபுரம் ஊராட்சி. இங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் குப்பை முறையாக அகற்றப்படாமல், பல இடங்களில் குவிந்து கிடக்கின்றன. மேலும், கால்நடைகள் இரைதேடும் போது, குப்பையை கிளறுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால், அப்பகுதி வழியே செல்லும் பகுதிவாசிகள் அவதிப்பட்டு வருவதோடு, தொற்று நோய் ஏற்படுவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். பலமுறை புகார் அளித்தும், ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதில் அலட்சியம் காட்டுவதாக பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, குப்பையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.----எஸ்.பூபாலன், திருமழிசை.

கிடப்பில் தானியங்கி டிக்கெட் இயந்திரம்

கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில், டிக்கெட் கவுன்டர் அருகே தானியங்கி டிக்கெட் இயந்திரம் ஒன்று உள்ளது. பல ஆண்டுகளாக பயனற்று கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால், பரபரப்பான காலை - மாலை நேரங்களில் நீண்ட நேரம் ரயில் பயணியர் காத்திருந்து, டிக்கெட் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, தானியங்கி இயந்திரத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர, ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ஜி.வெங்கட கிருஷ்ணன், கவரைப்பேட்டை.

குழாயை சூழ்ந்த கழிவுநீர் அகற்றப்படுமா?

திருவாலங்காடு ஒன்றியம், அரிசந்திராபுரம் ஊராட்சியில், அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையை ஒட்டி குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. அப்பகுதியை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தோர், இதை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். தற்போது, இந்த குழாயை கழிவுநீர் சூழ்ந்துள்ளது.இதனால், குடிநீரை பிடிக்க முடியாமல் அப்பகுதியினர் அவதியடைந்து வருவதுடன், அந்த குடிநீரை பருகுவதால், தொற்று பாதிப்பில் சிக்கும் அபாயம் உள்ளதாக புலம்புகின்றனர். எனவே, இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.----கோமதி, திருவாலங்காடு.

நந்தியாற்றில் குப்பை அகற்றுவது எப்போது?

திருத்தணி கோட்டா ஆறுமுக சுவாமி கோவில் அருகே செல்லும் நந்தியாற்றில், நகராட்சி குப்பை கொட்டப்படுகின்றன. இதுதவிர, சிலர் இறந்த ஆடு, கோழி இறைச்சிகளையும் ஆற்றில் கொட்டுகின்றனர்.இந்த ஆற்றின் தண்ணீர், கொசஸ்தலை ஆற்றுடன் இணைந்து, பூண்டி ஏரிக்கு செல்கிறது. இந்நிலையில், சில நாட்களாக நகராட்சி குப்பையை ஆற்றில் கொட்டி வருவதால், தண்ணீர் மாசுபடும் அபாயம் உள்ளது. மேலும், ஆற்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதால், அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே, ஆற்றில் குப்பை கொட்டுவதை தடுக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-என்.ரமேஷ், திருத்தணி.

பராமரிப்பு இல்லாத நிழற்குடை மதுக்கூடமாக மாறிய அவலம்

பொன்னேரி - பெரும்பேடு வழித்தடத்தில், தேவராஞ்சேரி கிராமத்தில் உள்ள பேருந்து நிழற்குடை பராமரிப்பு இன்றி உள்ளது. இரவு நேரங்களில் 'குடி'மகன்களின் மதுக்கூடமாக மாறிவிடுகிறது.நிழற்குடையின் உட்பகுதியில் காலி மதுபாட்டிகள், பிளாஸ்டிக் பாட்டில்கள், டம்ளர்கள் என, குப்பை குவிந்து காணப்படுகின்றன.மேலும், தனிநபர்களின் விளம்பர சுவரொட்டிகள் நிழற்குடை முழுதும் ஒட்டி வைக்கப்பட்டு உள்ளன. எனவே, பயணியரின் நலன் கருதி, நிழற்குடையை உரிய முறையில் பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-எஸ்.சத்யா, தேவராஞ்சேரி.

கோவில் வளாகத்தில் மின்விபத்து அபாயம்

பள்ளிப்பட்டு ஒன்றியம், அத்திமாஞ்சேரிபேட்டை துணை மின்நிலையம் அருகே, 100க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளன.இதில், பள்ளிப்பட்டு நெடுஞ்சாலையை ஒட்டி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு, விசேஷ நாட்களில், 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து வழிபட்டு செல்கின்றனர். இந்நிலையில், கோவிலின் பின்புறம் உயர் மின்னழுத்த கம்பம் உள்ளது. இந்த கம்பத்தில் வளர்ந்துள்ள கொடிகள், தற்போது மின்கம்பியில் படரும் நிலைக்கு வளர்ந்துள்ளன.எனவே, உயிர்பலி ஏற்படுவதற்கு முன், இந்த கொடிகளை அகற்றி, மின்கம்பத்தை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.--என்.ஜி.குமரேசன், அத்திமாஞ்சேரிபேட்டை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை