உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர்: புகார் பெட்டி;எலும்புக் கூடாக மாறிய மின்கம்பம்

திருவள்ளூர்: புகார் பெட்டி;எலும்புக் கூடாக மாறிய மின்கம்பம்

எலும்புக் கூடாக மாறிய மின்கம்பம்கனகம்மாசத்திரம் மாநில நெடுஞ்சாலையில், திருவாலங்காடு அருகே புளியங்குண்டா கிராமம் அமைந்துள்ளது. இங்கு, நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் வெளியில் தெரியும் நிலையில் உள்ளது. மேலும், எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் என்ற அபாய நிலையில் உள்ளது. எனவே, சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க, மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கிராம மக்கள், புளியங்குண்டா. புதர் மண்டிய எரிமேடை பராமரிப்பு எப்போது?

ஆரணி அடுத்த வடக்கநல்லுார் ஊராட்சிக்கு உட்பட்டது கொள்ளுமேடு கிராமம். இங்குள்ள ஆரணி ஆற்றங்கரையோரம், இப்பகுதி மக்களுக்கான பொது சுடுகாடு உள்ளது.இந்த சுடுகாடு முறையான பராமரிப்பு இன்றி, எரிமேடை முழுதும் புதர் மண்டியுள்ளது. ஊராட்சி நிர்வாகம் உடனடியாக புதர்களை அகற்றி, முறையாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். - எம்.முரளி, ஆரணி.

குறுகிய சாலையில் டாஸ்மாக் அச்சத்தில் பகுதி வாசிகள்

பொதட்டூரில் இருந்து கீழப்புடி செல்லும் சாலையில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த சாலையில், 10க்கும் மேற்பட்ட குறுகலான சாலை திருப்பங்கள் உள்ளன.சாலையோரம் புதர்மண்டி உள்ளதால், சாலையின் அகலம் 3 மீட்டருக்கும் குறைவாக உள்ளது. பொதட்டூரிலிருந்து இந்த வழியாக கீழப்புடி மற்றும் ஸ்ரீகாவேரிராஜபேட்டை செல்லும் அப்பகுதிவாசிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.இந்நிலையில், டாஸ்மாக் கடைக்கு வரும் 'குடி'மகன்கள் வாகனங்களை கட்டுப்பாடு இன்றி ஓட்டி வருவதால் விபத்து அபாயம் நிலவுகிறது.எனவே, டாஸ்மாக் கடையை அகற்றிவிட்டு, வேறு இடத்திற்கு மாற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். - கே.ராஜகோபால், பொதட்டூர்பேட்டை.

தெருநாய்கள் உலா பகுதி மக்கள் பீதி

பொன்னேரி அடுத்த திருவேங்கிடபுரம், உப்பரபாளையம், பொன்னியம்மன் நகர் ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன.இவை, ஒன்றோடு ஒன்று சண்டைபோடுவது, இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை விரட்டி கடிப்பது என பொதுமக்கள், குடியிருப்புவாசிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்துகின்றன.ஒரு சில நாய்கள் நோய் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளன. நாளுக்கு நாள் நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதால், குழந்தைகள், பள்ளி மாணவர்கள் தெருவில் நடந்து செல்வதற்கே தயங்குகின்றனர்.எனவே, மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம், இப்பகுதிகளில் உள்ள தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - ஆர்.ஜி.கிருஷ்ணா, பொன்னேரி.

மூடப்படாத மழைநீர் கால்வாயால் துர்நாற்றம்

பேரம்பாக்கம் ஊராட்சி சமுதாய கூடம் எதிரில், இரண்டு ஆண்டுகளுக்கு முன் மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது. கழிவு நீர் கலந்து துர்நாற்றம் வீசியதால், கால்வாய் மேல் 'சிமென்ட் கான்கிரீட்' அமைக்கும் பணி நடந்தது.ஆனால், ஒரு இடத்தில் மட்டும் 40 அடி வரை கான்கிரீட் மூடி அமைக்காமல், திறந்த நிலையில் அரைகுறையாக பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால், அந்த இடத்தில் சாக்கடை நீர் தேங்கி, துர்நாற்றம் வீசுவதுடன் மலேரியா, டெங்கு கொசு உற்பத்தியாகி நோய் பரவும் அபாய நிலை உள்ளது. எனவே, கடம்பத்துார் ஒன்றிய நிர்வாகம் பணியை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.-- எஸ்.சரத்குமார், பேரம்பாக்கம்.

ஏரியில் இறைச்சி கழிவுகளை கொட்டுவது தடுக்கப்படுமா?

திருத்தணி - பொதட்டூர்பேட்டை செல்லும் மாநில நெடுஞ்சாலையில், அமிர்தாபுரம் ஏரியில் இருந்து ஆழ்துளை கிணறுகள் அமைத்து, நகராட்சி நிர்வாகம் மேல்திருத்தணி, பாபிரெட்டிப்பள்ளி, அமிர்தாபுரம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் கொண்டு செல்கிறது.இந்நிலையில், ஏரியில் மீன், கோழி இறைச்சிக் கழிவுகள் மற்றும் தலைமுடிகளை மர்மநபர்கள் சிலர் கொட்டி வருகின்றனர். இதனால், குடிநீர் மாசுபடும் அபாயம் உள்ளது. எனவே, ஏரியில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி