| ADDED : நவ 16, 2025 02:26 AM
மீஞ்சூர்: நிரம்பி வழியும் சீமாவரம் அணைக்கட்டில், ஆபத்தை உணராமல் மக்கள் குளித்து விளையாடி வருகின்றனர். பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதால், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். மீஞ்சூர் அடுத்த சீமாவரத்தில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே, வல்லுார் அணைக்கட்டு அமைந்துள்ளது. தொடர் மழை மற்றும் பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரால், அணைக்கட்டு நிரம்பி வழிகிறது. அணைக்கட்டில் இருந்து வினாடிக்கு, 1,300 கன அடி உபரிநீர் வெளியேறி, எண்ணுார் கடலுக்கு சென்று கொண்டிருக்கிறது. அணைக்கட்டில் நிரம்பி வழியும் தண்ணீர் அருவி போல் கொட்டுவதால், பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மக்கள் குளித்து மகிழ்கின்றனர். அதே சமயம், அவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது. குறிப்பாக, இளைஞர்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அணைக்கட்டின் மேல் பகுதியில் இருந்து குதிப்பது உள்ளிட்ட ஆபத்தான விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனர். ஆர்ப்பரித்து செல்லும் உபரிநீர் வெளியேறும் பகுதியில் பெண்கள் குளிக்கின்றனர். அணைக்கட்டின் மேல்பகுதியில் நின்றபடி செல்பி எடுத்தும், 'ரீல்ஸ்' போடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால், அசம்பாவிதங்கள் நடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இதை தவிர்க்க, உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை, மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.