| ADDED : டிச 10, 2025 06:19 AM
ஊத்துக்கோட்டை: சாலையில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என, ஊத்துக்கோட்டை பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், 15 வார்டுகளில், 3,000திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 700க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்கள் உள்ளன. மேற்கண்ட இடங்களில் இருந்து குப்பைகள் பெற, பேரூராட்சி நிர்வாகம் மூலம் 30க்கும் மேற்பட்ட துாய்மைப் பணியாளர்கள் உள்ளனர். இவர்கள் தினமும் சென்று குப்பையை சேகரிக்கின்றனர். இதில் திருவள்ளூர், நாகலாபுரம், சத்தியவேடு செல்லும் சாலைகளில் மளிகை, ஓட்டல், காய்கறி உள்ளிட்ட கடைகள் உள்ளன. கடைகளில் பெரும்பாலானவர்கள் குப்பையை சாலையில் கொட்டுகின்றனர். இதனால் சுகாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, ஊத்துக்கோட்டை பஜார், திருவள் ளூர், சத்தியவேடு, நாகலாபுரம் மற்றும் பேரூராட்சிக்கு உட்பட்ட இடங்களில் உள்ள வணிக நிறுவனங்கள், சாலையோர கடைகள் ஆகியவற்றில் சேகரமாகும் குப்பையை மக்கும், மக்காத குப்பையாக தரம் பிரித்து, துாய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும். சாலையில் கொட்ட கூடாது. மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என, பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.