மெய்யூரில் குடிநீர் தட்டுப்பாடு அரசு பேருந்து சிறைபிடிப்பு
ஊத்துக்கோட்டை:மெய்யூர் கிராமத்தில் ஏற்பட்ட குடிநீர் தட்டுப்பாட்டை சீர்செய்யாத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பகுதிமக்கள் அரசு பேருந்துகளை சிறைபிடித்து, காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். பூண்டி ஒன்றியம் மெய்யூர் ஊராட்சியில், 5,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, அங்குள்ள கொசஸ்தலை ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து, குழாய்கள் மூலம், ஐந்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. அதன்பின், வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதில், ரெட்டித்தெரு, குளக்கரை தெரு, பண்டார தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் மின்மோட்டார் பழுதடைந்ததால், குடிநீர் வினியோகம் பாதித்தது. இரண்டு நாட்களுக்கு மேலான நிலையில் பழுது நீக்காததால், அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அவதிப்பட்டனர். நேற்று காலை ஆத்திரமடைந்த பெண்கள், காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த தடம் எண்: டி.41 மற்றும் தனியார் பேருந்துகளை சிறைபிடித்தனர். ஊராட்சி செயலர் லோகநாதன் பேச்சு நடத்தி, 'விரைவில் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து பெண்கள் கலைந்து சென்றனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.