உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்துாரில் திடீரென 100 அடி துாரம் உள்வாங்கிய கடல்

திருச்செந்துாரில் திடீரென 100 அடி துாரம் உள்வாங்கிய கடல்

துாத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினமும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தற்போது, கோடை விடுமுறை என்பதால் வழக்கத்தைவிட பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில், நேற்று கிருத்திகை என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.பக்தர்கள் பலர் பால்குடம், பாதயாத்திரை, சுவாமிக்கு நேர்ச்சை செலுத்தி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். கோவிலை சுற்றி வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இந்நிலையில், திருச்செந்தூர் கோவில் கடல் பகுதி சுமார் 100 அடி தூரம் கடல் உள்வாங்கி காணப்பட்டது.கடலில் உள்ள பாறை திட்டுக்கள் அனைத்தும் வெளியே தெரிந்தன. கடலில் உள்புறம் இருந்த பாசி படலங்கள் படர்ந்து காணப்படுகிறது. இருப்பினும், கோவிலுக்கு வந்துள்ள பக்தர்கள் கடல் உள்பகுதிக்கு சென்று குளித்து மகிழ்ந்தனர். பக்தர்கள் சிலர் பாறையில் குடும்பத்துடன் அமர்ந்து குளித்தனர்.உற்சாகத்தில் சிலர் பாறைகளில் நின்று அலைபேசியில் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ஆபத்தை உணராமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாறையில் உட்கார்ந்து குளித்தனர். ஆபத்தை உணராத அவர்களை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பினர். போலீசாரின் எச்சரிக்கைக்கு செவிமடுக்காமல், சிலர் கடலுக்குள்ளே சென்று குளித்தும், ஓடி விளையாடவும் செய்தனர்.இதுகுறித்து உள்ளூர்வாசிகள் கூறியதாவது:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடல்பகுதி அமாவாசை, பவுர்ணமி தினங்களில் உள்வாங்குவதும், பின்னர் இயல்பு நிலைக்கு திரும்புவதும் வழக்கமான ஒன்று. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்தமிழகம், கேரளா கடலோரப் பகுதிகளில் சீற்றம் காணப்பட்டது.திருச்செந்துாரிலும் கடல் சீற்றமாக இருந்ததால் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டது. 7 ம் தேதி அமாவாசை என்பதால் நேற்று திருச்செந்துார் அய்யா வைகுண்டர் அவதாரபதி கடலோரப் பகுதிக்கும் கோவில் கடலோரப் பகுதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதி காலை 8 மணி முதல் பகல் 12.30 மணி வரை சுமார் 100 அடி வரை திடீரென உள்வாங்கி காணப்பட்டது. நேரம் செல்ல செல்ல கொஞ்சம் கொஞ்சமாக கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை