| ADDED : ஜூன் 29, 2024 12:00 AM
துாத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் குளிக்கும் கடலில், மே 16 மற்றும் 17ம் தேதிகளில் அதிகமான ஜெல்லி மீன்கள் கடற்கரையில் ஒதுங்கின. 'இவை உடலில் படும்போது, தோலில் அலர்ஜி ஏற்படும்' என, பக்தர்களிடம் அதிகாரிகள் எச்சரித்தனர்.இந்நிலையில், நேற்று அதிகப்படியான ஜெல்லி மீன்கள் கரை ஒதுங்கின. பக்தர்களில் சிலர், ஆபத்தை உணராமல் அந்த மீன்களை கையில் பிடித்து செல்பி எடுத்து, உற்சாகமாக கடலில் குளித்தனர்.இதற்கிடையே, மீன்வளத் துறை உதவி இயக்குனர் புஷ்ராஷபனம், ஆய்வாளர்கள் சுப்பிரமணியன், சிவராமகிருஷ்ணன், திருச்செந்துார் மரைன் இன்ஸ்பெக்டர் கோமதிநாயகம் ஆகியோர் ஜெல்லி மீன்களை ஆய்வு செய்தனர்.கடற்கரை பாதுகாப்பு வீரர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் சிவராஜா கூறியதாவது:கரை ஒதுங்கிய ஜெல்லி மீன்களில், மாதிரிக்காக ஒரு ஜெல்லி மீனை மட்டும் அதிகாரிகள் எடுத்துக் கொண்டனர். மீதமுள்ள ஜெல்லி மீன்கள், கடலில் ஆழமான இடத்தில் விடப்பட்டன. ஆய்வுக்கு பிறகே மற்ற விபரங்கள் தெரிய வரும்.இவ்வாறு அவர் கூறினார்.