திருச்செந்துாரில் முற்றுகை போராட்டம்
துாத்துக்குடி : திருச்செந்துாரில், 20 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய பாதாள சாக்கடை திட்டம் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. வீடுகளில் இருந்தும், விடுதிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் இருந்தும் வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிப்பதற்காக, தோப்பூர் அருகே சுத்திகரிப்பு நிலையம் உள்ளது. அந்த நிலையத்தில் இருந்து அசுத்தமான வாயு வெளியேறுவதாகவும், துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதி மக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டிஉள்ளனர்.அந்த சுத்திகரிப்பு நிலையத்தை அப்புறப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, தோப்பூர் பொதுமக்கள் நேற்று காலை, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர். நகராட்சி அலுவலகத்திற்குள்ளே செல்ல முயன்ற போது அவர்களை போலீசார் தடுப்புகள் அமைத்து நிறுத்தினர். இருப்பினும், தடுப்புகளை மீறி உள்ளே சென்ற அவர்கள், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருச்செந்துார் தாசில்தார் பாலசுந்தரம் பேச்சு நடத்தினார். வரும் 19ம் தேதி, பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்பு நிலையத்தை சுற்றுச்சூழல், குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் நகராட்சித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்வர் என அவர் உறுதி அளித்தார்.இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.