| ADDED : மே 03, 2024 02:25 AM
துாத்துக்குடி:மருத்துவ காப்பீடு பாலிசி எடுத்திருந்த தொழிலதிபருக்கு, உரிய பணம் அளிக்காத இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு, 5.81 லட்சம் வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவிட்டது.துாத்துக்குடியை சேர்ந்த தொழிலதிபரான ஜோ வில்லவராயர், தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம், மூத்த குடிமக்களுக்கான ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து, இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் காப்பீடு செய்ததன் அடிப்படையில், சிகிச்சைக்கான பணத்தை தருமாறு கேட்டார். அதில், ஒரு பகுதியை மட்டும் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது; மீதி பணத்தை தர மறுத்துள்ளது.இதுகுறித்து, ஜோ வில்லவராயர், துாத்துக்குடி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை ஆணைய தலைவர் திருநீல பிரசாத், உறுப்பினர்கள் சங்கர், நமச்சிவாயம் ஆகியோர் விசாரித்தனர். சிகிச்சைக்காக ஜோ வில்லவராயர் செலுத்திய 5.46 லட்சம் ரூபாய், சேவை குறைபாடு மற்றும் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடு தொகை 25,000 ரூபாய், வழக்கு செலவு தொகை, 10,000 ரூபாய் என மொத்தம், 5.81 லட்சம் ரூபாயை ஒரு மாத காலத்திற்குள் வழங்க, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டனர்.