| ADDED : ஆக 18, 2024 02:55 AM
துாத்துக்குடி:துாத்துக்குடி- - திருநெல்வேலி இடையே தினமும் இயக்கப்பட்டு வந்த பயணிகள் ரயில் நாளை (ஆகஸ்ட் 19) முதல் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 30 சதவீதத்துக்கும் குறைவான வருவாய் இருப்பதால் அந்த ரயில் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.இதற்கு பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். துாத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச்சங்க செயலர் பிரம்மநாயகம் கூறியதாவது: பாலருவி விரைவு ரயில் துாத்துக்குடி வரை நீட்டிக்கப்பட்டதாலும், போதிய வருமானம் இல்லாத காரணத்தாலும் துாத்துக்குடி - திருநெல்வேலி பயணிகள் ரயில் ரத்து செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இதனால், நாரைக்கிணறு, கைலாசபுரம், மணியாச்சி, ஒட்டநத்தம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து தூத்துக்குடிக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு வரும் பயணிகள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள். எனவே, அந்த ரயிலை ரத்து செய்யும் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.