பைக் மீது கார் மோதல் வியாபாரி மனைவியுடன் பலி
கோவில்பட்டி: பைக் மீது அதிவேகமாக சென்ற கார் மோதியதில் வியாபாரி, அவரது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியை சேர்ந்தவர் கடற்கரை, 68. கருவேப்பிலை வியாபாரியான இவர், மனைவி வள்ளியம்மாளுடன், 55, திருக்கார்த்திகையை முன்னிட்டு, துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வேலாயுதபுரம் கருப்புசாமி கோவிலுக்கு நேற்று சாமி கும்பிட சென்றார். கோவிலில் தரிசனத்தை முடித்து கொண்டு இருவரும் பைக்கில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். தோணுகால் விலக்கு பகுதியில் அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, விருதுநகரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வேகமாக சென்ற கார், பைக் மீது எதிர்பாராத விதமாக மோதியது. துாக்கி வீசப்பட்ட கடற்கரையும், வள்ளியம்மாளும் உயிரிழந்தனர். கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார், கன்னியாகுமரியை சேர்ந்த கார் டிரைவர் அபிலேஷ், 37, என்பவரிடம் விசாரிக்கின்றனர்.