| ADDED : நவ 21, 2025 01:19 AM
துாத்துக்குடி: பெண்ணிடம் பணம் பெற்று, எஸ்.பி.,யிடம் மனு அளிக்க அழைத்து வந்த இடைத்தரகரை போலீசார் கைது செய்தனர். துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் நேற்று முன்தினம் மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டிருந்தார். அப்போது, பெண் ஒருவர் குடும்ப பிரச்னை தொடர்பாக, கரூரை சேர்ந்த ஒரு நபருடன் வந்து மனு கொடுத்தார். விசாரணையில், பெண்ணுடன் வந்தவர், கரூர் மாவட்டம், சின்னதாராபுரத்தை சேர்ந்த வின்சென்ட், 49, என்பதும், அவர், பெண்ணிடம் குடும்ப பிரச்னையை குறைதீர்க்கும் முகாமில் மனு அளித்து தீர்த்து வைப்பதாக கூறி, 5,000 ரூபாய் பெற்றதும் தெரிந்தது. வின்சென்ட் மீது, கரூர் மாவட்டத்தில் மோசடி, திருட்டு உட்பட மூன்று வழக்குகளும், ஈரோடு மாவட்டத்தில் ஒரு வழக்கும் உள்ளது தெரிந்தது. இதையடுத்து, போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 'மக்களிடம் பணம் வாங்கி, இடைத்தரகர்களாக செயல்படும் நபர்கள் மீது, சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.