ரூ.10 கோடி இ- -- சிகரெட் துாத்துக்குடியில் பறிமுதல்
துாத்துக்குடி: சீனாவில் இருந்து துாத்துக்குடி வந்த கப்பலில், குடைகள் இறக்குமதி செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்த கன்டெய்னர் பெட்டிகளில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, குடைகளுக்கு பதிலாக மத்திய அரசால் தடை விதிக்கப்பட்ட இ- - சிகரெட் பாக்கெட்டுகள் இருந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு, 10 கோடி ரூபாய். அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக, கேரள மாநிலத்தைச் சேர்ந்த நாகராஜ், 42, சென்னை, கொட்டிவாக்கத்தைச் சேர்ந்த ராஜ்குமார், 46, மடிப்பாக்கத்தை சேர்ந்த சுவாமிநாதன், 56, ஆகியோரை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணைக்கு பின், மூவரும் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த கடத்தல் தொடர்பாக, முக்கிய நபர் ஒருவரை தேடி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகள் கூறுகையில், 'இ -- சிகரெட் புகைப்பது அதிக ஆபத்தானது என்பதால், அதை பயன்படுத்தவும், விற்பனை செய்யவும் 2019ல் மத்திய அரசு தடை விதித்தது. அதை மீறி சிலர், சட்டவிரோதமாக சீனாவில் இருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்கின்றனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.