| ADDED : ஜூலை 27, 2011 02:22 AM
சாத்தான்குளம் : ரோடு சீரமைப்பு பணிகள் மந்தமாக நடப்பதாகக் கூறி பஞ்.,அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.சாத்தான்குளம் புதுவேதக்கோயில் தெருவில் ரோடு சீரமைப்புப் பணிக்காக ஆறுமாதங்களாக தோண்டப்பட்ட ரோடு சரி செய்யப்படாமல் உள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடுரோட்டில் ஜல்லியை குவித்து வைத்துவிட்டு சென்றுவிட்டதால் பொதுமக்கள் நடந்து செல்லவே சிரமப்படுகின்றனர். இது சம்பந்தமாக சாத்தான்குளம் 3,4,5வது வார்டு பொதுமக்கள் சாத்தான்குளம் டவுன் பஞ்.,அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.அதிகாரி இல்லாததால் தங்கவேல் தலைமையில் அதிமுக.,நகர இளைஞரணி சோமசுரேஷ், 4வது வார்டு செயலாளர் மருதமலை முருகன், இளைஞர் இளம்பெண் பாசறை நகர செயலாளர் அருணாசலம், இந்து முன்னணி நகர செயலாளர் பேச்சிமுத்து, பாலசுப்பிரமணியன், பரமசிவன் மற்றும் வார்டு பொதுமக்கள் சாத்தான்குளம் தாசில்தார் கருப்பசாமியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் ஐந்து சமுதாயத்தினர் ஈமக்கிரியை செய்ய செல்லும் பிரதான ரோட்டில் நடக்கவே முடியாத அளவு கற்களை குவித்து வைத்துள்ளனர். இறந்தவர்களின் உடலை வேறு பாதையில் கொண்டு சென்றால் அதன் மூலம் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படும். எனவே விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தனர். மனுவைப் பெற்ற தாசில்தார் கருப்பசாமி நேரில் சென்று பார்வையிட்டு, பஞ்.,நிர்வாக அதிகாரியிடம் விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்.