தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அதிகாரி பணியிடம் நான்கு மாதமாக காலியாக உள்ளது. இதனால் அங்கன்வாடி மையங்களுக்கு குழந்தைகளுக்கு சத்துமாவு, முட்டை உள்ளிட்டவை சீராக வழங்குவதில் சிரமம் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. புதிய கலெக்டர் இவ்விஷயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் மொத்தம் 1509 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் 1428 மையங்கள் அங்கன்வாடி மையமாகவும், 81 மையங்கள் மினி அங்கன்வாடி மையமாகவும் செயல்பட்டு வருகிறது. அங்கன்வாடி மையத்தில் ஒரு பணியாளர் மற்றும் ஒரு உதவியாளர் பணியாற்றி வருகின்றனர்.
மினி மையத்தில் பணியாளர் ஒருவர் மட்டும் பணி செய்து வருகின்றனர்.அங்கன்வாடி மையங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கமே வீட்டில் உள்ளவர்கள் கூலி வேலைக்கு சென்று விட்டால் சிறிய குழந்தைகளை பாதுகாத்து அவர்களுக்கு உணவு அளித்து அவர்களுக்கு மையத்தில் உள்ள பணியாளர் மூலம் கல்வி கற்று கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு தினமும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தினமும் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு சத்துமாவு உருண்டை, முட்டை, உணவுகள் வழங்கப்படுகிறது.அங்கன்வாடி மையங்களில் பல்வேறு தில்லுமுல்லுகள் அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது. குழந்தைகளுக்கு முறையாக முட்டைகள், சத்துமாவு உருண்டைகள் வழங்கப்படாமல் இருப்பதாக அவ்வப்போது புகார்கள் வந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
பெரிய குழந்தைகள் என்றால் வீட்டில் போய் இன்று முட்டை வழங்கவில்லை என்று பெற்றோர்களிடம் சொல்லிவிடும். சிறிய குழந்தைகளுக்கு சொல்ல தெரியாது என்பதால் இதுபோன்ற தவறுகள் அங்கு அதிகம் நடக்க வாய்ப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவ்வப்போது இது சம்பந்தமான புகார்கள் வரவும் அதிகாரிகள் சென்று நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது அதற்கும் முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அதிகாரி அலுவலகம் டூவிபுரத்தில் செயல்பட்டு வருகிறது. இது தவிர ஒவ்வொரு வட்டாரத்தில் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் தலைமையில் இயங்கி வருகிறது.ஒவ்வொரு வட்டாரத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களை வட்டார அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். மாவட்ட அதிகாரி மாவட்டம் முழுவதும் அலுவலக வேலை நாளில் ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று சென்டர் விசிட் செய்து வருவதாக கூறப்படுகிறது.தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட அதிகாரியாக பணியாற்றி வந்த பன்னீர்வேலு கடந்த மார்ச் மாதம் ஓய்வு பெற்றார்.
அதன் பிறகு தொடர்ந்து மாவட்ட அதிகாரி பணியிடம் காலியாக உள்ளது. இன்னும் அந்த பணியிடத்திற்கு அதிகாரி நியமிக்கப்படவில்லை.இதனால் விளாத்திகுளம் வட்டார அலுவலர் அன்பு குளோரியா மாவட்ட அதிகாரியாக கூடுதல் பொறுப்பு நியமிக்கப்பட்டார். இதற்கு ஆரம்பத்திலே எதிர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது. வயது முதிர்ந்தவரை விட்டு விட்டு குறைவான வயதுடையவரை நியமிக்கிறார்கள் என்று வட்டார அலுவலர்களுக்குள் பிரச்னை வெடித்தது. அப்பாயின்ட் மென்ட் தேதி சீனியார்டி படிதான் விளாத்திகுளம் அலுவலர் கூடுதல் பொறுப்பாக நியமிக்கப்படுவதாக அதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.இருப்பினும் இது சம்பந்தமான பிரச்னை தொடர்ந்து வெடித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பொறுப்பு அலுவலர் இந்த பிரச்னை எல்லாம் தாண்டி பணி செய்ய முடியாத நிலை தான் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
அத்துடன் விளாத்திகுளத்திலும் அவர் பணி செய்ய வேண்டியிருப்பதால் மாவட்ட அலுவலகத்திலும் அவர் முழுமையான பணிகளை மேற்கொள்ள முடியாமல் பல பணிகள் தேக்கமடைந்து கிடப்பதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதனால் பணியாளர்களுக்குரிய சலுகை உள்ளிட்டவற்றை கூட முறையாக வழங்க முடியாமல் நிற்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகள் சிக்கியுள்ளதால் இதனை அறிந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சில அங்கன்வாடி மையங்கள் திறக்காமல் திறந்ததாக கணக்கு காட்டி குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய பொருட்களை ஸ்வாகா செய்து வருவதாகவும் தற்போது புதிய புகார்கள் தொடர்ந்து வர துவங்கியிருப்பதாக கூறப்படுகிறது.திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாளிலும் இதுபோன்ற மனுக்கள் ஒன்றிரண்டு கிராமங்களில் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறை தூத்துக்குடி மாவட்டத்தில் கடும் தள்ளாட்டத்தில் சிக்கி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு அரசு வழங்கும் இலவச சத்துமாவு, முட்டை போன்றவை கிடைக்காத நிலை ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.தூத்துக்குடி மாவட்ட புதிய இளம் கலெக்டராக பதவி ஏற்றுள்ள ஆஷீஷ்குமார் இந்த விஷயத்தில் உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் விரும்புகின்றனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட துறையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பிரச்னை உருவாவதற்குள் புதிய மாவட்ட அதிகாரியை உடனடியாக அரசு நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.