| ADDED : செப் 10, 2011 02:05 AM
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்
பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மாநில தேர்தல் அலுவலர் அய்யர்,
திருப்பூரில் இன்று ஆய்வு நடத்துகிறார்.தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல்
அடுத்த மாதம் நடைபெறுகிறது. தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையிலும்,
ஏற்பாடுகள் மிகத்தீவிரமாக நடந்து வருகின்றன. திருப்பூர் மாவட்டத்தில்
தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி
ஒன்றியங்களுக்கான தேர்தல் நடத்தும் மற்றும் உதவி தேர்தல் நடத்தும்
அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்கட்டமாக, வாக்காளர் பட்டியல்
தயாரிப்பு பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சட்டசபை தேர்தலில்
பயன்படுத்திய வாக்காளர் பட்டியல், உள்ளாட்சி தேர்தலுக்கு ஏற்ற வகையில்,
வார்டு வாரியாக, பாகம் பிரிக்கும் பணி நடந்து வருகிறது. இப் பணி இன்று
நிறைவடைந்து இறுதி பட்டியல் தயாராகி விடும். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள
உள்ளாட்சி அமைப்புகளில் மொத்தம் 2,435 ஓட்டுச்சாவடிகள் அமைய உள்ளன.
மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கு 424 ஓட்டுச்சாவடிகள்; மூன்று
நகராட்சிகளில் 125 ஓட்டுச்சாவடி; மூன்றாம் நிலை நகராட்சிகள் இரண்டில் 61
ஓட்டுச்சாவடி; 13 பேரூராட்சிகளில் 253 ஓட்டுச்சாவடிகள்
அமைக்கப்படும்.ஊராட்சிகளில் 1,572 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
ஓட்டுச்சாவடிகள் அமைவிடம் குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில்
இன்று பிற்பகல் 3.00 மணிக்கு நடக்கிறது; அனைத்து கட்சி பிரதிநிதிகள்
பங்கேற்கின்றனர். கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்று வரும்
தேர்தல் தொடர்பான முன்னேற்பாடுகள் ஆய்வு மற்றும் தேர்தல் பணிகள் குறித்த
அதிகாரிகளின் ஆலோசனை கூட்டங்களில், மாநில தேர்தல் அலுவலர் அய்யர்
பங்கேற்கிறார். அக்கூட்டம் இன்று மாலை 4.00 மணிக்கு நடக்கிறது. மாவட்ட
தேர்தல் அலுவலர் மதிவாணன், எஸ்.பி., பாலகிருஷ்ணன், மாநகராட்சி, நகராட்சி,
பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், தேர்தல் நடத்தும், உதவி தேர்தல்
நடத்தும் அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.