திருப்பூர் :தலைமை பண்பை வளர்த்துக் கொள்ள மாணவர்கள், சமூக பணியில் ஈடுபட வேண்டும்; அதன் மூலம் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள முடியும் என, மாவட்ட கல்வி அலுவலர் சுப்ரமணியம் பேசினார்.திருப்பூர் வருவாய் மாவட்ட சாரண, சாரணீய இயக்க பொதுக்குழு கூட்டம் விவேகானந்தா வித்யாலயாபள்ளியில் நடந்தது; முதன்மை கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமைவகித்தார்.சாரண, சாரணீய இயக்க செயலாளர்சரவணபவன் ஆண்டு அறிக்கைவாசித்தார். அதில், மாவட்டம் முழுவதும் 186 சாரண, சாரணீய பிரிவுகள் செயல்பட்டு வந்தன; இந்த ஆண்டில் 78 பிரிவுகள் புதியதாக துவங்கப்பட்டுள்ளன. கடந்த ஜன., மாத சுதந்திர தின விழாவின் போது ஐதராபாத் மாநிலம் ஜாம்புரியில் நடந்த போட்டிகளில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 46 சாரண, சாரணீய பிரிவினர் பங்கேற்று, 23 தங்க பதக்கம், 27 வெள்ளிபதக்கம் பெற்றனர்.நாடு முழுவதும் இருந்து பல பள்ளிகள் பங்கேற்ற நிலையில், திருப்பூர் மாவட்ட மாணவர்கள் அதிக பரிசு வென்றனர். இந்த ஆண்டு ராஷ்டிரபதி விருதுக்கு விண்ணப்பித்த 24 சாரண, சாரணீயர் தேர்ச்சி பெற்றுள்ளனர்; மாநில கவர்னர் ராஜ்யபுரஷ்கார் விருதுக்கு 138 சாரணியர், 126 சாரணீயர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.மாவட்ட கல்வி அலுவலர் சுப்ரமணியம் பேசியதாவது:மாணவர்கள் தலைமை பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் தன்னம்பிக்கை ஏற்படும். சாரண, சாரணீய இயக்கத்தில் சேர தலைமை ஆசிரியர்கள் ஊக்கமளிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான பயிற்சி முகாம் நடத்த, சீருடை பெற தன்னார்வ தொண்டு அமைப்புகளை நாடலாம்.வரும் 30ம் தேதிக்குள் சாரண, சாரணீயரை ஊக்குவிக்க பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாமும், நவ., மாதம் சிறப்பு புத்தாக்க பயிற்சியும் நடக்க உள்ளது, என்றார்.மாவட்ட சாரண ஆணையாளர் நடராஜன் பேசுகையில், ''400க்கும் மேற்பட்ட பள்ளிகள் இருந்தும் 30 சதவீதம் மட்டுமே பதிவு செய்து சாரண, சாரணீய பிரிவு ஏற்படுத்தியுள்ளன. ஜனாதிபதியிடம் விருது பெறவும், படிப்பு முடிந்த பின் ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை, மத்திய அரசு நிறுவனங்களில் வேலை வாய்ப்பு தேடவும் சாரண, சாரணீய இயக்கத்தின் சான்றிதழ் உதவியாக இருக்கும்,'' என்றார். கூட்டத்தில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் பங்கேற்றனர்.