| ADDED : ஆக 12, 2024 11:39 PM
திருப்பூர் மாவட்டத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லுாரிகளில், 500க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. குறிப்பாக, பெரும்பாலான பள்ளிகளில், கணிதம், அறிவியல் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. நீண்ட நாட்களாக ஆசிரியர் இல்லாததால், அரசு பள்ளி மாணவர்கள் கல்வியில் பின்தங்கும் நிலை ஏற்படுகிறது. உடற்கல்வி ஆசிரியர் இல்லாததால், விளையாட்டுத்துறையிலும் மாணவர்களால் பிரகாசிக்க முடியவில்லை. ஆய்வக உதவியாளர் இல்லாததால், பல்லடம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், ஆய்வகம் பயன்படுத்தப்படாத நிலையிலேயே உள்ளது. ஆராய்ச்சிகளில் ஈடுபடவேண்டிய மாணவர் சமுதாயம், ஆராய்ச்சி குறித்து தெரியாமலேயே கல்வி கற்றுக்கொண்டிருக்கிறது.அதேபோல், நுாலகர் இல்லாததால் பெரும்பாலான பள்ளி நுாலகங்கள் செயல்படாத நிலையிலேயே உள்ளன. மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லுாரிகளில் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். பள்ளி ஆய்வகங்கள், நுாலகங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும். மைதானம் இல்லாத பள்ளி, கல்லுாரிகளிலும் விளையாட்டு மைதானம் அமைத்துத்தரவேண்டும்; உடற்கல்வி ஆசிரியர்களை நியமித்து, மாணவர்களை விளையாட்டில் மிளிரச் செய்யவேண்டும்.- அண்ணாதுரை, மாநில அமைப்பாளர், பாரத மாணவர் பேரவை.