உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூரில் "முத்தூட் நகை அடகு கடையில் துணிகர கொள்ளை * ஊழியர்களை கட்டி போட்டு ரூ.3 கோடி நகை "அபேஸ

திருப்பூரில் "முத்தூட் நகை அடகு கடையில் துணிகர கொள்ளை * ஊழியர்களை கட்டி போட்டு ரூ.3 கோடி நகை "அபேஸ

திருப்பூர் :திருப்பூரில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில், நேற்று காலை புகுந்த, ஆறு பேர் கொண்ட கும்பல், ஊழியர்களை கட்டி போட்டு, 3 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்றது.திருப்பூர் காங்கயம் ரோடு பத்மினி கார்டன் அருகில், 'முத்தூட் பைனான்ஸ் பின்கார்ப்' - நிறுவனம் செயல்படுகிறது; நேற்று காலை 8.30 மணிக்கு, நிறுவனத்தின் மேலாளர் மதிவாணன் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது வந்த நான்கு பேர், மதிவாணன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, கயிறால், அவரது கை மற்றும் கால்களை கட்டி கீழே தள்ளினர்.அவரிடம், லாக்கர் திறக்க இருந்த ஒரு சாவியை பிடிங்கினர். 'கம் டேப்' பில் வாய், கண் ஆகியவற்றை ஒட்டி, டேபிளுக்கு பின்னால் கீழே தள்ளினர்; இதன் பின், வாடிக்கையாளர் போல் அமர்ந்தனர். அலுவலகத்தில் அடுத்தடுத்து நுழைந்த, அலுவலகத்தை சுத்தம் செய்யும் ருக்மணி, நகை மதிப்பீட்டாளர் பிரீத்தி ஆகியோரை கத்தியை காட்டி மிரட்டி கையும், காலையும் கட்டி, மறைவிடத்தில் தள்ளினர்.வணிக அலுவலர் முத்துசாமியையும் பிடித்து, லாக்கரின் மற்றொரு சாவி குறித்து கேட்டனர். நகை மதிப்பீட்டாளரிடம் உள்ளதாக அவர் கூறியதால், ஆத்திரமடைந்த கொள்ளையர்கள், முத்துசாமியை தாக்கினர். பிரீத்தியின் பேக்கில் இருந்த மற்றொரு லாக்கர் சாவியை எடுத்தனர். இதன் பின், உள்ளே வந்த கேஷியர் ஆனந்தராஜையும் கட்டிப் போட்டனர்.அலுவலகத்தின் மாடிக்கு ஏறும் கீழ் பகுதியில், ஒருவன் காவலுக்கு நின்று கொள்ள, மற்றவர்கள் லாக்கரில் இரண்டு சாவிகளையும் போட்டு, திறந்து உள்ளே சென்றனர்.நேற்று முன்தினம் மாலை கணக்கு முடிக்கும் போது, 8 கோடி ரூபாய் மதிப்புள்ள, 27 ஆயிரத்து, 913.80 கிராம் எடையுள்ள, 3,489 சவரன் நகைகள் மற்றும், 2 லட்சத்து, 36 ஆயிரத்து, 413 ரூபாய் பணம் லாக்கரில் இருந்தது. லாக்கரை திறந்து உள்ளே சென்ற கொள்ளையர்கள், நகைகள் மற்றும் பணத்தை, தாங்கள் தயாராக கொண்டு வந்திருந்த பேக்கில் எடுத்து போட்டு சென்றனர். சிறிய அளவிலான நகைகளை கொள்ளையர்கள் தொடவில்லை.கொள்ளை போன நகைகள் குறித்து, நேற்று மாலை வரை போலீசார் கணக்கெடுத்தனர்; இதில், 1,381 சவரன் நகைகள் கொள்ளை போனதாக தெரிவித்தனர்.கீழே நின்றிருந்த ஒரு கொள்ளையன் வாடிக்கையாளர்கள் யாரையும் மேலே விடாமல் தடுத்து, மீட்டிங் நடப்பதாக கூறி திருப்பி அனுப்பியதால், யாரும் மேலே செல்லவில்லை; கொள்ளையர்கள் சென்ற சிறிது நேரத்தில், நகைகளை அடகு வைக்க வந்த வாடிக்கையாளர் சிலர், உள்ளே முனகல் சத்தம் கேட்டு எட்டி பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்ட அவர்கள், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.முன்னதாகவே திட்டமிட்டு, நேரத்தை தேர்வு செய்து நேற்று காலை 8.30 மணிக்கு வந்த கொள்ளையர்கள், 9.30 மணிக்குள் திருடி கொண்டு தப்பியுள்ளனர். அலுவலகத்துக்குள் கொள்ளையர்கள் பயன்படுத்திய கயிறு, கம்டேப், துணிகள் சிதறி கிடந்தன. தடயங்களை மறைக்கும் வகையில், அலுவலகம் முழுவதும் மிளகாய் பொடியை துவி விட்டு சென்றுள்ளனர்.ஐ.ஜி., வன்னிய பெருமாள், டி.ஐ.ஜி., பாலநாகதேவி, எஸ்.பி., (பொறுப்பு) ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர், விசாரணை நடத்தினர்.

நோட்டமிட்ட திருடர்கள் :கொள்ளையில் ஈடுபட்ட நபர்கள், கடந்த 22ம் தேதி மாலை, 4.45 மணிக்கு வந்துள்ளனர். மூன்று பேர் வந்து, ஆறு சவரன் நகையை அடகு வைக்க வேண்டும்; நகையை நண்பர்கள் கொண்டு வருவதாக கூறியபடி, நோட்டமிட்டுள்ளனர்.மாலை, 5.00 மணி ஆனதால், நகையை மறுநாள் அடகுவைத்து கொள்வதாக கூறிவிட்டு சென்றுள்ளனர். கொள்ளையடித்தவர்களில் மூன்று பேர், 22ம் தேதி மாலையில் வந்தவர்கள்; அடையாளம் தெரியும் என அங்கிருந்த ஊழியர்கள், போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பில் அலட்சியம்:பல கோடி ரூபாய் மதிப்பிலான, ஆயிரக்கணக்கான சவரன் நகைகள் வைக்கப்பட்டிருந்த முத்தூட் பின் கார்ப் பைனான்சில், போதிய பாதுகாப்பு ஏற்பாடு இல்லை. செக்யூரிட்டி ஆள் இல்லை.அலுவலகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எங்கேயும் வந்து செல்லும் வாடிக்கையாளர்களை வீடியோ எடுக்கும் வகையில், 'சிசிடிவி' கேமரா, அபாய சைரன் உள்ளிட்ட எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடும் இல்லை. கொள்ளை சம்பவத்தை கேள்விபட்டு, முத்தூட் பின் கார்ப் பைனான்ஸ் அலுவலகத்தை, அடகு வைத்த பலர் முற்றுகையிட்டனர்; போலீசாரை மீறி அலுவலகத்துக்குள் நுழைய முயற்சித்ததால், பரபரப்பு ஏற்பட்டது.

'பயப்படத் தேவையில்லை' :முத்தூட் பின் கார்ப் மேலாளர் மதிவாணன் கூறியதாவது:அலுவலகத்தின் முன் பக்க கதவை திறந்தவுடன், பின்னால் வந்தவர்கள், நகை அடகு வைக்க வேண்டும் என கூறினர்; உள்ளே நுழைந்து, என்னை கீழே தள்ளி விட்டு, கையுடன் , காலையும் சேர்த்து வைத்து, கயிறால் கட்டினர்.பையில் வைத்திருந்த சாவியை பிடுங்கிக்கொண்டு, வாயில் துணி திணித்து, டேப் ஒட்டிவிட்டனர். கண்ணையும், காதையும் அடைத்து டேப்பை ஒட்டி விட்டதால், என்ன நடக்கிறது எனக் கூட தெரியவில்லை. 2010, மார்ச் 17 முதல் ஒன்றரை ஆண்டுகளாக பெறப்பட்ட, 1,380 வாடிக்கையாளர்களின் நகைகள் உள்ளே இருந்தன.நகைகளுக்கு இன்சூரன்ஸ் உள்ளது; அடகு வைத்த நகை உரிமையாளர்களுக்கு நகை வழங்கப்படும். அவர்கள், அடகு சீட்டை காண்பித்து தங்களது நகை உள்ளதா என உறுதி செய்து கொள்ளலாம். நகை இல்லாதவர்களுக்கு மாற்று நகையோ அல்லது அதற்குரிய தொகையோ வழங்கப்படும்; நகையை அடகு வைத்தவர்கள் பயப்பட தேவையில்லை.இவ்வாறு மதிவாணன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை