மடத்துக்குளம் : அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மடத்துக்குளம்
ஒன்றியத்துக்குட்பட்ட பள்ளிகளுக்கு ரூ. 9.34 லட்சம் மதிப்பிலான பராமரிப்பு
மற்றும் மானியம் வழங்கப்பட்டது. பள்ளி மானியமாக 47 தொடக்கபள்ளிகளுக்கு தலா
ரூ.ஐந்து ஆயிரமும்,16 நடுநிலைப்பள்ளிகளுக்கு தலா 12 ஆயிரமும்,
மூன்றுமேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளுக்கு தலா ரூ.7 ஆயிரமும், மொத்தம்
69 பள்ளிகளுக்கு 4.69 லட்சம் ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த
நிதியை பயன்படுத்தி எழுது பொருட்கள்,இயங்காத நிலையிலுள்ள கருவிகளை பழுது
பார்த்தல், தொடரும் செலவினங்களை மேற்கொள்ளுதல், விளையாட்டு பொருட்கள்
வாங்கவும், அறிவியல் ஆய்வகம், கணினி கல்விக்கு தேவையான உபகரணங்கள்
வாங்கவும், தீத்தடுப்பு சாதனங்கள் வாங்கவும் பயன்படுத்தலாம். பராமரிப்பு
மானியமாக 37 பள்ளிகளுக்கு தலா ரூ.ஐந்து ஆயிரமும், மூன்று வகுப்பறைகளுக்கு
மேல் பயன்பாட்டிலுள்ள 28 பள்ளிகளுக்கு தலா ரூ.10 ஆயிரமும், பாக்கியுள்ள 65
அரசு பள்ளிகளுக்கு ரூ. 4.65 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த
மானியத்தில் பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் இணைப்பு, கதவு, மேஜை நாற்காலி,
மின் இணைப்பு, பழுது பார்க்கவும், கணினி, 'டிவி', டிவிடி, தரை, மேற்கூரை
பழுதுபார்க்கவும், சுவர்களுக்கு வண்ணம் பூசவும், வகுப்பறைகளுக்கு இடையில்
தடுப்பு சுவர்கள் அமைக்கவும், வேலிகள் அமைக்கவும், பிரஷ் போன்ற உபகரணங்கள்
வாங்கவும் பயன்படுத்தலாம்.அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்
பள்ளிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட காசோலைகள் வழங்கும் நிகழ்ச்சி
மடத்துக்குளம் ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. ஊரக தொழில்துறை
அமைச்சர் சண்முகவேலு ஒன்றியத்திலுள்ள 69 பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு
காசோலைகளை வழங்கினார்.