திருப்பூர்:திருப்பூர் நகரப் பகுதியில் ஒரே நாளில் ஆறு பேரை தெரு நாய் ஒன்று விரட்டி விரட்டி கடித்தது. இதனால், பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். தெரு நாய்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்.திருப்பூர் மாநகராட்சி, 60 வார்டுகளில் ஆயிரக்கணக்கான தெருநாய்கள் சுற்றி வருகின்றன. வீடுகளில் மீதமாகும் உணவுகளை உண்டும், கடைகள், ஓட்டல்களிலிருந்து வெளியே வீசப்படும் உணவு கழிவுகள், இறைச்சி கடைகளிலிருந்து வெளியேற்றப்படும் இறைச்சி கழிவுகள் என இந்த தெரு நாய்கள் உண்டு வாழ்கின்றன. இது தவிர விலங்கு ஆர்வலர்கள் பலரும் அவற்றுக்கு தினமும் உணவு வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நாய்கள் தெருக்களில் கூட்டம் கூட்டமாக சுற்றி வருவது, ஒன்றோடொன்று சண்டையிட்டு ரோட்டில் விரட்டிச் செல்வது, வாகனங்களில் வருவோரை துரத்திச் செல்வது, சில நேரங்களில் ரோட்டில் செல்வோரை கடிப்பது போன்ற யெல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், ரோட்டில் செல்லும் பொதுமக்கள் பெரும் அச்சத்துடன் செல்லும் நிலை காணப்படுகிறது.இந்நிலையில், நேற்று, 30வது வார்டுக்கு உட்பட்ட லட்சுமி நகர், மில்லர் ஸ்டாப் பகுதியில் ஒரு தெருநாய் அடுத்தடுத்து ஒரே நேரத்தில் ஆறு பேரை துரத்திச் சென்று கடித்து விட்டுத் தப்பியது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாயிடம் கடிபட்டவர்கள், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இவர்கள் தவிர, மேலும் 10 பேரை இந்த நாய் விரட்டிச் சென்று லேசான காயம் ஏற்படுத்தியதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். மாநகராட்சி பகுதியில் இது போல் தெரு நாய்களால் மக்கள் கடிபடும் சம்பவம் நாள் தோறும் நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.இது குறித்து தகவல் அறிந்து மாநகராட்சி சுகாதாரப் பிரிவினர், பொதுமக்களை கடித்த நாய் உட்பட பத்து நாய்களை பிடித்து சென்றனர்.
கு.க., சிகிச்சைக்கு ஏற்பாடு
மாநகராட்சி அலுவலர்கள் கூறியதாவது:தெரு நாய்களை கட்டுப்படுத்தும் விதமான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த இரு நாட்ளில் மட்டும் 27 மற்றும் 24வது வார்டு, இன்று (நேற்று) 30வது வார்டில், மொத்தம், 30 தெரு நாய்கள் பிடிக்கப்பட்டு, அறுவை சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து அனைத்து வார்டுகளிலும் தெரு நாய்களைப் பிடிக்கும் பணி நடக்கிறது. இவற்றுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டும், வெறி நாய் பாதிப்பு இருந்தால் அதற்கான சிகிச்சையும் அளிக்கப்படும். இது வரை பிடிபட்ட நாய்களில் வெறி நாய்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. தெரு நாய்கள் அறுவை சிகிச்சை தற்போது தன்னார்வ அமைப்பு மூலம் ஓரிடத்தில் மட்டும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சி சார்பில் இப்பணிக்கு இரு இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அங்கு இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.