| ADDED : மே 26, 2024 12:55 AM
திருப்பூர்:'ஒவ்வொரு அரசு துறையும் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் மாநில நலனும், சட்டம்-ஒழுங்கும், மக்கள் பாதுகாப்பும் கேள்வி குறியாகி விடும்,' என்று ஹிந்து முன்னணி வேதனை தெரிவித்துள்ளது.அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:கடந்த இரு நாட்களுக்கு முன், அரசு பஸ்சில் காவலர் சீருடையில் பயணம் செய்த போலீசாரிடம், போக்குவரத்து ஊழியர் கெடுபிடியாக நடந்து கொண்டது சமூக வலைதளங்களில் வைரலானது. அதற்கு போலீசார் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு பழிவாங்கும் விதமாக சில போலீசார், அரசு பஸ்களை மடக்கி போக்குவரத்து விதிமீறல் என்று பொய் வழக்குகள் பதிந்தனர். இரு அரசு துறைகளுக்கு இடையில் சுமூகமான நல்லுறவு இருக்க வேண்டும். மாறாக, ஒவ்வொரு அரசு துறையும் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டால் மாநில நலனும், சட்டம்-ஒழுங்கும், மக்கள் பாதுகாப்பும் கேள்விக் குறியாகி விடும். இறுதியில் பாதிப்புக்கு உள்ளாவது மக்கள் தான்.அனைத்து துறையினரும் தங்களை சுயபரிசோதனை செய்து கொண்டு, பொறுப்புடனும், கண்ணியத்துடனும் சட்டத்துக்கு உட்பட்டு நடந்து கொள்ள வேண்டும். மக்கள் நலனை கருத்தில் கொண்டு நிர்வாக குறைபாடுகளை உடனடியாக களைய முதல்வர் ஸ்டாலின் முன்வரவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.