- நிருபர் குழு -தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத, கோவை மாவட்டத்திலுள்ள, 162 நிறுவனங்கள் மீதும், திருப்பூர் மாவட்டத்தில், 77 நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.தொழிலாளர் தினத்தில், தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காவிட்டால், தொழிலாளர் நலத்துறை ஆய்வாளருக்கு உரிய படிவம் வாயிலாக தகவல் அனுப்பி முன் அனுமதி பெற வேண்டும்.அவ்வாறு பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு, இரட்டிப்பு ஊதியம் அல்லது விடுமுறை தினத்துக்கு முன்பாக அல்லது பிறகு மூன்று நாட்களுக்குள் ஊதியத்துடன், விடுப்பு அளிக்க வேண்டும். பொள்ளாச்சி
இந்த விதிமுறைகள் உரிய முறையில் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய, கோவை, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி பகுதிகளில், தொழிலாளர் நலத்துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) காயத்திரி தலைமையில் அதிகாரிகள், ஆய்வு நடத்தினர்.இதில், உரிய முன் அனுமதி பெறாமல், தொழிலாளர்களை பணிக்கு வரவழைத்த, 80 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 78 உணவு நிறுவனங்கள் மற்றும் 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் கண்டறியப்பட்டு, மொத்தம், 162 நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.தொடர் விசாரணையில், தவறு இழைத்த நிறுவனங்களுக்கு, குறைந்தபட்சம், 500 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது. உடுமலை
திருப்பூர் நகர், காங்கயம், தாராபுரம், உடுமலை பகுதியில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வில், 77 நிறுவனங்கள் தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை) சட்டம் மற்றும் விதிகளைமீறி, செயல்பட்டது தெரிய வந்துள்ளது.இந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக, திருப்பூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.