உடுமலை:உடுமலை நகரிலும், கிராமங்களிலும், கணக்கில்லாமல் சுற்றி, மக்களை மிரட்டும், தெருநாய்களை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பினர் தீவிர நடவடிக்கை எடுப்பது அவசியமாகும்.உடுமலை நகராட்சியிலுள்ள, 33 வார்டுகளிலும், தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது; திறந்த வெளியில் கொட்டப்படும் இறைச்சிக்கழிவுகளை இரையாக கொள்ளும் நாய்கள் கூட்டமாக முக்கிய ரோடுகளில், வரிசையாக படுத்து கொண்டு வாகன ஓட்டுநர்களை விரட்டுகின்றன.குடியிருப்பு பகுதிகளில், மக்களை விரட்டும் நாய்களால் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அதிகரித்த நாய்களால், இரவு நேரங்களில் மக்கள் அச்சத்துடன் சில பகுதிகளை கடக்க வேண்டியுள்ளது.நகரப்பகுதியில், சுற்றி திரியும் நாய்களுக்கு கருத்தடை செய்ய, நாய் பயண வாகனம், முன்பு நகராட்சி நிர்வாகத்தால் வாங்கப்பட்டது.இந்த வாகனத்தின் வாயிலாக சுழற்சி முறையில், நாய்கள் பிடிக்கப்பட்டு, கருத்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.ஆனால், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு, வாகனமும் காட்சிப்பொருளாக மாறி விட்டது. ஒப்பந்த அடிப்படையில், நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டமும் நீண்ட காலமாக செயல்படுத்தப்படவில்லை.இதே போல், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றிய கிராமங்களிலும், பேரூராட்சிகளின் குடியிருப்புகளிலும் தெருநாய்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.குழந்தைகளை தெருநாய்கள் தாக்கும் சம்பவங்கள் மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடந்து வருகிறது. இதே நிலை இப்பகுதியிலும், ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இறைச்சி கழிவும் காரணம்
சாதுவாக இருக்கும் தெருநாய்கள் மனிதர்களை தாக்கும் விதமாக மாறுவதற்கு, திறந்த வெளியில் கொட்டப்படும் இறைச்சிக்கழிவுகள் முக்கிய காரணமாகும்.கடைகளில், விதிமுறைகளை பின்பற்றாமல், ஆடு, கோழி ஆகியவற்றை இறைச்சிக்காக வெட்டுவதால், அப்பகுதியில், சுற்றி திரியும் நாய்கள் அங்கேயே முகாமிடுகின்றன. பின்னர், இறைச்சிக்கழிவுகள் கிடைக்காத நிலையில், மனிதர்களை தாக்குகின்றன.இப்பிரச்னைக்கு சுகாதார துறையினர் முக்கியத்துவம் அளித்து, நடவடிக்கை எடுத்தால், நாய் கடியிலிருந்து பெரும்பாலான மக்கள் தப்பிப்பார்கள். அனைத்து பகுதிகளிலும் இது குறித்த ஆய்வை நடத்த திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட வேண்டும்.