உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரூ.10 கோடி சொத்துக்காக வளர்ப்பு மகன் சித்ரவதை: அதிரடியாக மீட்ட போலீசார்

ரூ.10 கோடி சொத்துக்காக வளர்ப்பு மகன் சித்ரவதை: அதிரடியாக மீட்ட போலீசார்

காங்கேயம்:திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த நத்தக்காடையூர், வசந்தம் நகரை சேர்ந்தவர் நாச்சியப்ப கவுண்டர், 65; இவரது மனைவி லட்சுமி, 60. குழந்தை இல்லாததால், 10 ஆண்டுகளுக்கு முன், அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து, ஹரிஷ் என்ற ஆண் குழந்தையை தத்தெடுத்தனர். தற்போது சிறுவனுக்கு, 15 வயதாகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் நாச்சியப்ப கவுண்டர், வாகன விபத்தில் பலியாகி விட்டார். அவர் பெயரில் இருந்த, 10 கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் மற்றும் சொத்துக்கு வாரிசாக வளர்ப்பு மகனை நியமித்து விட்டார்.இதை விரும்பாத அவரது மனைவி லட்சுமி, உறவினர்களுடன் சேர்ந்து கொண்டு, சிறுவனை மன ரீதியாக துன்புறுத்த தொடங்கினர். ஒரு வாரத்துக்கும் மேலாக, சிறுவனை பண்ணை வீட்டில் அடைத்து, உணவு கொடுக்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர். குடிப்பதற்கு மட்டும் அதுவும் அரை டம்ளர் தண்ணீர் கொடுத்துள்ளனர். இயற்கை உபாதை கழிக்க கை, கால்களை கட்டி அழைத்து சென்றுள்ளனர். வெளியில் விடுமாறு சிறுவன் கேட்டபோது, லட்சுமி அடித்து துன்புறுத்தியுள்ளார். திருப்பூர் எஸ்.பி., அபிஷேக் குப்தா, காங்கேயம் போலீசாருக்கு தகவல் போனது. காங்கேயம் போலீசார், தோட்டத்துக்கு நேற்று சென்று சோதனை செய்ததில், சிறுவனை அடைத்து சித்ரவதை செய்தது தெரிந்தது. பூட்டை உடைத்து சிறுவனை மீட்டனர். எஸ்.பி., அறிவுறுத்தலின்படி, அரசு காப்பகத்தில் சிறுவனை சேர்த்தனர்.சிறுவனை துன்புறுத்திய வளர்ப்பு தாய், அவருக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்து, காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். பத்து கோடி ரூபாய் சொத்துக்காக, வளர்ப்புத்தாயே மகனை சித்ரவதை செய்தது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி