அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை ரூ.160 கோடியில் புனரமைக்க பரிந்துரை
- நமது நிருபர் -அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை, 160 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்க, அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக, கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறினார்.உடுமலை அருகே உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், 21 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள், உறுப்பினராக உள்ளனர். ஆலை, 60 ஆண்டுகளாக இயங்கி வந்த நிலையில், பழுதாகி, மூன்று ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது.கரும்பு விவசாயிகளின் நலன்கருதி, ஆலையை புனரமைத்து, மீண்டும் திறக்க வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.நேற்று நடந்த, திருப்பூர் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டத்தில், இதுதொடர்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.கரும்பு விவசாயிகள் பேசுகையில், 'அதிக பிழிதிறன் கொண்ட அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், அதிக அளவு உற்பத்தி நடந்து வந்தது. அமைச்சர் குழு பார்த்து சென்ற பிறகும், புனரமைப்பு செய்ய நடவடிக்கை இல்லை.திருப்பூர் மாவட்டத்தின் கரும்பு சாகுபடி மற்றும் கரும்பு விவசாயிகளை காப்பாற்றும் வகையில், தமிழக அரசு எங்கள் கோரிக்கையின் மீது சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்,' என்றனர்.கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறுகையில்,''அமராவதி சர்க்கரை ஆலையை முழுமையாக புனரமைப்பு செய்ய, 160 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டம், அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடந்த, பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனை கூட்டத்திலும், விவசாயிகளின் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. விரைவில், இதுதொடர்பான நல்லஅறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது,'' என்றார்.