| ADDED : மே 04, 2024 12:12 AM
திருப்பூர்;மத்திய அரசின் 'அம்ரூத் பாரத்' திட்டத்தின் கீழ், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனை விஸ்தரிப்பு செய்து மேம்படுத்தும் பணி கடந்தாண்டு அக்., முதல் நடந்து வருகிறது. முதல் பிளாட்பார்மில் முகப்பு நுழைவு வாயில், ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் பின்புறம் தடுப்புச்சுவர் மற்றும் பிளாட்பார்ம் விஸ்தரிப்பு பணி நடந்து வருகிறது.ஒரு பிளாட்பார்மில் பாதி பணி கூட முடிவடையாத நிலையில், இரண்டாவது பிளாட்பார்மிலும் கட்டுமான பணி கடந்த மார்ச்சில் துவங்கியது. இந்நிலையில், புஷ்பா தியேட்டர் சிக்னல் சந்திப்பு அருகே இருந்த, ரயில்வே ஊழியர் பழைய குடியிருப்பு இடித்து அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டுள்ளது.ரயில் விட்டு இறங்கும் பயணிகள் பிளாட்பார்மில் இருந்து விரைவாக வெளியேற, மூன்று அல்லது ஐந்து வழித்தடங்கள் அமைக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, முதல் பிளாட்பார்ம் உள்ள ஸ்டேஷன் நுழைவு வாயில் மறைக்கப்பட்டு பணி நடந்து வருகிறது. இடையூறுகளுக்கு மத்தியில் பயணிகள் சென்று வருகின்றனர்.பயன்பாட்டில் உள்ள புஷ்பா தியேட்டர் ஸ்டாப், பத்ரகாளியம்மன் கோவில் நுழைவு வாயில் அருகே விரைவில் பணி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. அவ்வாறு பணி துவங்கும் போது, பயணிகள் பிளாட்பார்மில் இருந்து வெளியேற மாற்று வழித்தடமாக தற்போது துாய்மை செய்யப்பட்ட குடியிருப்பு பகுதி ஒதுக்கப்படலாம். இதற்கான பணிகள் ஒரிரு நாளில் துவங்க உள்ளது.