| ADDED : ஜூலை 06, 2024 02:13 AM
உடுமலை;கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைப்பு சரிசெய்யப்படாமல், குளம் போல் தண்ணீர் தேங்கியும், குடிநீர் வடிகால் வாரியத்தினர் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மக்களை வேதனையடைய செய்துள்ளது.குடிமங்கலம் ஒன்றியத்திலுள்ள 23 ஊராட்சிகளுக்கும், திருமூர்த்தி அணையை ஆதாரமாக கொண்ட கூட்டுக்குடிநீர் திட்டத்தில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது; கடந்த சில மாதங்களாக, பெரும்பாலான ஊராட்சிகளில், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்கள் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.திருமூர்த்தி அணையில் இருந்து கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கு தேவையான அளவு குடிநீர் எடுக்கப்பட்டாலும், வினியோக பிரச்னைகளால், தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, பிரதான குழாய் உடைப்புகளில், அதிகளவு நீர் விரயம் ஏற்பட்டு வருகிறது.அவ்வகையில், குடிமங்கலம் வேலப்பநாயக்கன்புதுார் அருகே, கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்து நீண்ட நாட்களாகியும் சீரமைக்கப்படாமல் உள்ளது.அவ்விடத்தில், நாள்தோறும் தண்ணீர் வீணாகி, குளம் போல் தேங்கியுள்ளது. இதனால், பல கிராமங்களுக்கு சீராக குடிநீர் செல்வதில்லை.மேலும், சில இடங்களில் தண்ணீரை திருடும் நோக்கத்தில், பிரதான குழாயை உடைப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.இது குறித்து தீவிர விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவும், போலீசாரை உள்ளடக்கிய குழு அமைத்து ரோந்து செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூர் கலெக்டருக்கு அப்பகுதி மக்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர்.பல கிராமங்களில், குடிநீர் கிடைக்காமல் பாதிப்பு அதிகரித்தும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் போதிய நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.