திருப்பூர்;ஆறுமுகம் சுழற்கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்றும், வரும், 17ம் தேதி அரையிறுதி போட்டி நடக்கிறது.திருப்பூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் ஆறுமுகம் சுழற்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டி கடந்த ஜூன், 30ல் துவங்கியது. மாவட்டம் முழுதும் இருந்து, மொத்தம், 44 அணிகள் இத்தொடரில் பங்கேற்றுள்ளன. லீக், நாக் அவுட், காலிறுதி மற்றும் அரையிறுதி சுற்றுகளாக இப்போட்டி நடக்கிறது.பல்லடம் டி.எஸ்.ஆர்., கிரிக்கெட் அகாடமி மைதானத்தில் நடந்த லீக் போட்டியில், கிங்ஸ் ஸ்டோன் பீல்டு பி அணி, 25 ஓவரில், ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 168 ரன் எடுத்தது. இலக்கை விரட்டிய புளூ ரேஞ்ச் அணி, 19.1 ஓவரில், ஆறு விக்கெட் இழப்புக்கு, 169 ரன் எடுத்து வெற்றி பெற்றது.மற்றொரு போட்டியில் யுகம் கிரிக்கெட் கிளப் அணி, 25 ஓவரில், ஒன்பது விக்கெட் இழந்து 181 ரன் எடுத்தது. இலக்கை விரட்டிய நலம் கணேசன் கிளப் அணி, 22 ஓவரில், 128 ரன்னுக்கு ஆல்அவுட்டானது. 53 ரன் வித்தியாசத்தில், யுகம் அணி வெற்றி பெற்றது. தொடர்ந்து, ஒரு வாரமாக தலா இரண்டு வீதம், 12 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.கடந்த, 11ம் தேதி நடந்த காலிறுதி போட்டியில், ஸ்பேஸ் எக்ஸ் அணி, 24.3 ஓவரில், 124 ரன் எடுத்தது. இலக்கை விரட்டிய குன்னத்துார் கிரிக்கெட் கிளப் அணி, 17.3 ஓவரில், ஆறு விக்கெட் இழப்புக்கு, 127 ரன் எடுத்து வெற்றி பெற்றது.மாருதி அவெஞ்சர்ஸ் அணி, 25 ஓவரில், எட்டு விக்கெட் இழப்புக்கு, 183 ரன் எடுத்தது. இலக்கை விரட்டிய ஸ்பார்ட்ன்ஸ் கிரிக்கெட் கிளப் அணி, 23.1 ஓவரில், 141 ரன் எடுத்து ஆல்அவுட்டானது. 42 ரன் வித்தியாசத்தில், மாருதி அவெஞ்சர் அணி வெற்றி பெற்றது. அவிநாசி டீ பப்ளிக் பள்ளியில் இன்றும், வரும், 17ம் தேதியும் அரையிறுதி போட்டி நடக்கிறது.