| ADDED : ஆக 21, 2024 12:14 AM
பல்லடம்:கரைப்புதுார் கிராமத்தில் வெறி நாய்கள் தாக்குதல் நடத்தியது, பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சியில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குறிப்பாக, அருள்புரம், உப்பிலிபாளையம், சின்னக்கரை, லட்சுமி நகர், கரைப்புதுார் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் மிக நெருக்கமாக வசிக்கின்றனர்.இப்பகுதிகளில், நுாற்றுக்கணக்கான தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவற்றில், வெறி நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட நாய்கள், மனிதர்கள் மற்றும் கால்நடைகளை அச்சுறுத்தி வருகின்றன.இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:கரைப்புதுார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான வீதிகளில் நுாற்றுக்கணக்கில் தெரு நாய்கள் சுற்றித் திரிகின்றன. இவற்றில் வெறி பிடித்த சில நாய்களும் உள்ளன. இரண்டு தினங்களுக்கு முன், வெறி பிடித்த நாய்கள், ஆடு மற்றும் கோழிகளை கடித்து குதறியதுடன், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் சிலரையும் காயப்படுத்தின.வெறி பிடித்த நாய்களால், குழந்தைகள் மற்றும் பள்ளி செல்லும் மாணவ, மாணவியருக்கு அச்சுறுத்தல் உள்ளது. வளர்ப்பு நாய்களைக் காட்டிலும், தெரு நாய்களின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக உள்ளது.கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் தெருநாய்களால் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வருகிறோம். எனவே, கரைப்புதுார் கிராமத்தில் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டியது மிகவும் அவசர அவசியமாக உள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.