திருப்பூர்: ஒரத்துப்பாளையம் அணைக்கட்டு பகுதியில், சீமைக்கருவேல மரங்களை அகற்றிவிட்டு, 2.50 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் திட்டம் நாளை துவங்கப்படுகிறது. அணையை சரணாலயமாக மாற்றும் முனைப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.கொங்கு மண்டலத்தின் மேற்கு பகுதிகளை வளப்படுத்திய நொய்யல், காவிரியுடன் கலக்கிறது. கரூர் மாவட்டத்தில், ஆறு காவிரியில் கலக்கும் இடம் நொய்யல் என்பதால், அதே பெயரில் ஆறு அழைக்கப்படுகிறது. பாசன வசதியை உருவாக்கும் வகையில், நொய்யல் ஆற்றின் குறுக்கே, அணைக்கட்டு கட்டும் திட்டம் உருவாக்கப்பட்டது. 'முட்டம் முதல் 32 அணைக்கட்டு' என்ற பேரூர் கல்வெட்டு தகவல் கூறினாலும், ஒரத்துப்பாளையம் என்ற ஒரு அணை மட்டுமே நொய்யலின் குறுக்கே, பிரமாண்டமாக கட்டப்பட்டது. சீமைக்கருவேல் ஆக்கிரமிப்புஈரோடு, கரூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயன்பெறும் வகையில் பாசனத்துடன் கூடிய அணைக்கட்டு கட்டப்பட்டது. அதனபடி, 2.290 கி.மீ., நீளமுள்ள அணைக்கட்டு 17.44 மி.க. அடி தண்ணீர் தேங்கும் வகையில் கட்டப்பட்டது. அணை மூலம், ஈரோடு மாவட்டத்தில், 500 ஏக்கரும், கரூர் மாவட்டத்தில், 9,875 ஏக்கரும் பாசன வசதி பெறும் என கணக்கிடப்பட்டது.மொத்தம், 1000 ஏக்கர் பரப்பில், இரண்டு கிராமங்களை இடம்பெயர செய்து, ஒரத்துப்பாளையம் அணை கட்டப்பட்டு 1992ல் திறக்கப்பட்டது. சாயக்கழிவு தேங்கி, எதிர்மறை விளைவு ஏற்பட்டதால், அணையில் தண்ணீர் தேக்க கூடாதென, கோர்ட் உத்தரவிட்டுள்ளது.அதன்படி, நொய்யலில் வரும் தண்ணீரை தேக்காமல், அப்படியே ஆற்றில் செல்லும் வகையில், மதகுகள் திறக்கப்பட்டுள்ளன. இதன்காரணமாக, கையகப்படுத்தப்பட்ட 1,000 ஏக்கர் பரப்பும், சீமைக்கருவேல முட்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது.நாளை மரக்கன்று நடும் விழாதிருப்பூர் மாவட்டத்தில், 18 லட்சம் மரங்கள் வளர்க்கப்படுகிறது; நடப்பு ஆண்டில், மூன்று லட்சம் மரக்கன்று நடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தை இயக்கும் வெற்றி அமைப்பு சார்பில், ஒரத்துப்பாளையம் அணை பகுதியில், மரக்கன்று நட்டு சரணாலயமாக மாற்ற அனுமதி கோரப்பட்டது.திருப்பூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் அமைச்சர் சாமிநாதன் முயற்சியால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஒத்துழைப்பால், அனுமதி வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அணையில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றும் பணி நடந்து வருகிறது. ஒரத்துப்பாளையம் அணையை சரணாலயமாக மாற்றும் முயற்சியாக, நாளை மரக்கன்று நடும் விழா நடக்க உள்ளது.---ஒரத்துப்பாளையம் அணையில் உள்ள சீமைக்கருவேல் மரங்கள் அகற்றப்பட்டுள்ளன.
'வனத்துக்குள் திருப்பூர்' மற்றும் காங்கயம் துளிகள் அமைப்பு சார்பில், ஒரத்துப்பாளையத்தில் மரக்கன்று நட்டு வளர்க்கும் திட்டம் துவங்கப்படுகிறது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடக்கும் விழாவில், 4ம் தேதி(நாளை) காலை, 9:30 மணிக்கு, அமைச்சர் சாமிநாதன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்று, மரக்கன்று நடும் பணியை துவக்கி வைக்க உள்ளனர்.
அணைப்பகுதியில் உள்ள, 800 ஏக்கரில், சீமைக்கருவேல மரம் அகற்றப்படும்; பிறகு, மண் பண்படுத்தப்பட்டு, சொட்டுநீர் பாசன வசதி ஏற்படுத்தப்படும். அதற்கு பிறகு மரக்கன்று நடப்படும். நடப்பு ஆண்டில், ஒரு லட்சம் மரக்கன்று நடப்படும்; ஐந்தாண்டு திட்டமாக 2.50 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க திட்டமிட்டுள்ளோம்.பாதுகாப்பான சூழல், அணைக்கப்பட்டு, லட்சக்கணக்கான மரங்கள் வளரும் போது, இயற்கையான சரணாலயமாக மாற்றம் பெறவும் வாய்ப்புள்ளது. - சிவராம், தலைவர், 'வெற்றி' அமைப்பு