| ADDED : மார் 21, 2024 08:48 AM
உடுமலை:கோடை நோய்த்தாக்குதலை தடுப்பதற்கு, குழந்தைகள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு அங்கன்வாடி மையங்களின் சார்பில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.உடுமலை பகுதிகளில், தற்போது கோடை வெயில் துவங்கியுள்ளது. இதனால், மக்களுக்கு ஏற்படும் கோடை கால நோய்களிலிருந்து தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. மூன்று முதல் ஐந்து வரை உள்ள குழந்தைகள், மையங்களில் பராமரிக்கப்படுகின்றனர்.அவர்களுக்கான சத்துமாவு, சத்துணவும் வழங்கப்படுகிறது. அதேபோல், அந்தந்த மையங்களுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கும் சத்துமாவு, அவர்களின் எடை சரிபார்ப்பு பணிகள் மையத்தில் நடக்கிறது.கோடை வெப்பம் அதிகரித்து வருவதால், பலவிதமான நோய்த்தாக்குதலும் உண்டாகின்றன. குறிப்பாக, குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.இதனால் உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் வட்டாரத்துக்குப்பட்ட அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள், அதிகம் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்வதற்கு, குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர்கள் பணியாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.மேலும், கர்ப்பிணி பெண்களுக்கு, நேரடியாகச்சென்று அவர்களின் உடல்நிலையை கண்காணித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர்.கோடையின் தாக்கம் அதிகம் இருப்பதால், மையத்திலிருக்கும் குழந்தைகளை மதியமே பெற்றோரும் அழைத்துச்சென்று விடுகின்றனர்.