| ADDED : ஜூலை 02, 2024 01:38 AM
திருப்பூர்;திருப்பூர், தாராபுரம் ரோடு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எதிரில் செயல்படும், பாலா ஆர்த்தோ மருத்துவமனையில், ஏ.ஐ., வசதியுடன் கூடிய ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மைய துவக்க விழா நேற்று நடந்தது.மேயர் தினேஷ்குமார் திறந்து வைத்து பேசியதாவது: பாலா மருத்துவமனையில் ஏ.ஐ., தொழில்நுட்ப உதவியுடன் 'ரோபோடிக்' முறை சிகிச்சை கொண்டு வந்திருப்பது, திருப்பூர் மருத்துவ துறையில் ஒரு புரட்சி. பெரிய, பிரபல மருத்துவமனைகளுக்கு இல்லாத துணிவு, இம்மருத்துவமனைக்கு வந்திருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இம்மருத்துவமனை, மூட்டு மாற்று அறுவை சிகிச்சையில் தனி முத்திரை பதித்து வருகிறது; அதனால், மக்களுக்கு நம்பிக்கை அதிகரித்திருக்கிறது.இவ்வாறு, அவர் பேசினார்.பாலா மருத்துவமனை நிறுவனர் பாலசுப்ரமணியம் பேசுகையில், ''15 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட எங்கள் மருத்துவமனையில், ஆயிரக்கணக்கானோருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம். அவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். எங்கள் மீதுள்ள நம்பிக்கையில் ஏராளமானோர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். திருப்பூரில் முதன் முறையாக, ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை துவங்கியுள்ளோம்; இதன் வாயிலாக, உலகத்தரம் வாய்ந்த சிகிச்சை வழங்க முடியும்'' என்றார்.முன்னதாக, தெற்கு சரக காவல் உதவி கமிஷனர் நந்தனி, துணை மேயர் பாலசுப்ரமணியம், ஐ.எம்.ஏ., முன்னாள் தலைவர் பாரதி உட்பட பலர் பங்கேற்று பேசினர்.