உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அடைபடும் பாதை; தடைபடும் மழைநீர்!

அடைபடும் பாதை; தடைபடும் மழைநீர்!

திருப்பூர்:'அடைபட்டு கிடக்கும் நீர்வழிப்பாதைகளை மீட்டெடுத்தால், நீர்வளம் அதிகரிக்கும்' என்ற யோசனை முன்வைக்கப்பட்டிருக்கிறது.கோடை மழை பெய்து வரும் நிலையில், நீர் வழித்தடங்கள் வழியாக மழைநீர் பெருக்கெடுத்து, கிராம, நகர்புறங்களில் உள்ள குளம், குட்டைகள் நிரம்பி வருகிறது. 'இதனால், நிலத்தடி நீர்மட்டம் உயர்வதுடன், தண்ணீர் தட்டுப்பாடும் நீங்கும்' என, உள்ளாட்சி நிர்வாகங்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளன.இருப்பினும், பெரும்பாலான கிராமப்புறங்களில் நீர் வழித்தடங்கள் அடைபட்டும், தடைபட்டும் கிடக்கின்றன. கிராமங்களில் உள்ள நெடுஞ்சாலை மற்றும் கிராமப்புற சாலையோரம் மழைநீர் வழிந்தோடி செல்வதற்கான வடிகால் அமைக்கப்பட்டிருக்கும்; பள்ளமாக இருக்கும் அந்த வடிகாலை ஒட்டி விவசாய நிலம், குடியிருப்புகள் உள்ளன.அவற்றின் உரிமை யாளர்கள், அந்த மழைநீர் வடிகாலில் மண் போட்டு நிரப்பி, தங்கள் பகுதிக்கு அணுகுபாதை அமைத்துக் கொள்கின்றனர்; இதனால், வடிகாலில் வழிந்தோடி வரும் மழைநீர், தடுக்கப்படுகிறது. பல கிராமங்களில், சாலையோரம் மழைநீர் வடிகால் அமைக்கப்படாமல் இருப்பதால், மழைநீர், சாலையில் பெருக் கெடுக்கிறது. இதனால், சாலை சேதமடைவதுடன், குளம், குட்டைகளில் நீர் நிரம்புவதும் தடைபடுகிறது.கிராமிய மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சம்பத்குமார் கூறியதாவது: பெரிய பெரிய ஆறு, ஓடை, குளம், குட்டைகளுக்கு செல்லும் நீர்வழித்தடங்களை மட்டும் தான், அதன் தன்மை மாறாமல் பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. மாறாக, சிறு குளம், குட்டைகளுக்கு செல்லும் நீர்வழித்தடங்களையும் பராமரிக்க வேண்டும்.சாலையோரம் உள்ள மழைநீர் வடிகாலை கடந்து குடியிருப்பு, அல்லது விவசாய நிலங்களுக்கு செல்வோர், அந்த வடிகாலை மண் நிரப்பி மூடாமல், மழைநீர் வழிந்தோடி செல்ல ஏதுவாக குழாய் பதித்து, அதன் மீது மண் நிரப்பி தான், அணுகுபாதை அமைக்க வேண்டும்.அதே சாலை அமைக்கும் போது, மழைநீர் வடிகால் கட்டாயம் அமைத்து, சாலையில் விழும் மழைநீர் வடிகால் வழியாக வழிந்தோடி செல்லும் வகையில் சாலை அமைக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் இந்த கட்டமைப்பை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி