| ADDED : ஆக 13, 2024 12:42 AM
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி பகுதியில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சிப் பணிகளை காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில், பள்ளி மேம்பாட்டு நிதியில், 4.90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 14 வகுப்பறைகள் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ளன. ஜப்பான் பன்னாட்டு நிறுவனம் கூட்டுறவு நிதி முகமை சார்பில், துணை சுகாதார மையங்கள், கூடுதல் மையங்கள் அமைத்தல் ஆகிய திட்டத்தில் 3 மையங்கள் 2.10 கோடி ரூபாய் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.நகர்ப்புற உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியில் 2.9 கோடி ரூபாய் மதிப்பில் கே.வி.ஆர்., நகரில் ஜம்மனை பள்ளத்தின் குறுக்கில், உயர் மட்டப்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஏறத்தாழ 10 கோடி ரூபாய் மதிப்பில் நிறைவு பெற்றுள்ள இந்த கட்டடங்கள் நேற்று பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டன. சென்னை தலைமை செயலகத்திலிருந்து கணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் இவற்றைத் திறந்துவைத்தார். இடுவம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடந்த இதற்கான விழாவில் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார் முன்னிலை வகித்தனர். மண்டல குழு தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.பள்ளியில் புதிய வகுப்பறைகளை ரிப்பன் வெட்டி, குத்து விளக்கேற்றியும் முக்கிய பிரமுகர்கள் திறந்து வைத்தனர்.