| ADDED : ஜூலை 29, 2024 12:37 AM
உடுமலை: திருப்பூர் மாவட்டம், ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதியில், குழிப்பட்டி உள்ளிட்ட மலை கிராமங்கள் அமைந்து உள்ளன. அக்கிராம மக்கள் மருத்துவ தேவைக்காக சமவெளிக்கு வர, சாலை வசதியில்லை. எனவே, காடம்பாறை வழியாக வால்பாறை சாலையை அடைந்து, சுமார், 50 கி.மீ.,க்கும் அதிகமான துாரம் கரடுமுரடான பாதையில் பயணித்து சமவெளிக்கு வர வேண்டும்.இந்நிலையில், நேற்று காலை குழிப்பட்டியை சேர்ந்த, காளியப்பன் மனைவி ராஜேஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பதறிய அப்பகுதி மக்கள், ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால், தங்களின் சொந்த வாகனத்தில், கர்ப்பிணியை அழைத்து வந்துள்ளனர்.காட்டுப்பட்டி பகுதிக்கு வரும் போது, அப்பெண்ணுக்கு வலி அதிகரித்து, அவ்விடத்திலேயே பிரசவம் பார்க்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பிரசவத்தில் பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.அப்பகுதி மக்கள் கூறுகையில், 'அவசர மருத்துவ சிகிச்சை கூட கிடைக்காமல் தவிக்கிறோம். மலை கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர நீண்ட காலமாக போராடி வருகிறோம். நடவடிக்கை இல்லை. கர்ப்பிணியர், முதியோர் மருத்துவ சிகிச்சைக்காக ஒவ்வொரு முறையும், உயிர் பயத்துடன் வனப்பகுதியில் பயணித்து வருகிறோம். குழிப்பட்டியில் இருந்து திருமூர்த்திமலை வரை சாலை அமைத்தால், எளிதாக சமவெளி பகுதிக்கு வர முடியும்' என்றனர்.