உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு இழப்பீடு; தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

வறட்சியால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு இழப்பீடு; தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

உடுமலை;வறட்சி மற்றும் நோய் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட, தென்னை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என, தென்னை விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.உடுமலையில், தென்னை விவசாயிகள் சங்க, மாவட்டக்குழுக்கூட்டம் நடந்தது. மாவட்டத்தலைவர் பரமசிவம் தலைமை வகித்தார்.மாநிலத்தலைவர் மதுசூதனன், மாநிலச்செயலாளர் விஜயமுருகன், மாவட்டச்செயலாளர் அருண்பிரகாஷ், மாவட்ட குழு உறுப்பினர்கள் லெனின், ராஜகோபால், தேவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

திருப்பூர் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கடும் வறட்சியினால், தென்னை விவசாயிகள் கடுமையாக பாதித்துள்ளனர்.எனவே, தோட்டக்கலைத்துறை வாயிலாக, பாதிப்புகள் குறித்து விரைவில் கணக்கெடுப்பு நடத்தி, மாவட்ட கலெக்டர்கள் அரசுக்கு நிவாரணம் வழங்க பட்டியல் அனுப்பி வைக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட விவசாயிகளின், காய்ந்த தென்னை மரங்களுக்கு குறைந்த பட்சம், மரம் ஒன்றுக்கு, ரூ.15 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், வறட்சி மற்றும் பல்வேறு நோய் தாக்குதல்களால், காய்ப்புத்திறனை இழந்த தென்னை மரம், ஒன்றுக்கு, ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.அனைத்து தென்னைமரங்களுக்கும் காப்பீடு செய்யும் வகையில், மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம், தமிழக அரசின் தோட்டக்கலைத்துறையினர் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும், தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டால், வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை அதிகரிக்க வேண்டும்.மத்திய அரசின் 'நாபெட்' நிறுவனம், கொப்பரைத் தேங்காய் விலை, ஒரு கிலோ ரூ.140 ஆக நிர்ணயம் செய்ய வேண்டும்.மேலும், தற்போது, ஒரு ஏக்கருக்கு, -290 கிலோ மட்டும், ஒரு ஆண்டிற்கு- ஒருமுறை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது.எனவே, 2014ம்- ஆண்டு வரை 'நாபெட்' நிறுவனம் கொள்முதல் செய்தது போல, ஒரு ஏக்கருக்கு, ஒரு ஆண்டிற்கு, 900 கிலோ ஆண்டுக்கு, 4 முறை கொள்முதல் செய்ய வேண்டும்.தென்னைமரங்களை கடுமையாகத் தாக்கி, பெரும் சேதத்தை ஏற்படுத்தி வரும் நோய்களைக் கட்டுப்படுத்த, வேளாண் பல்கலை மற்றும் தென்னை வளர்ச்சி வாரியம் ஆகிய நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ