திருப்பூர்;ரோட்டை மீட்துத்தரக்கோரி, வஞ்சிநகர் பகுதி மக்கள் திரண்டு வந்து, கலெக்டரிடம் மனு அளித்தனர்.திருப்பூர் மாநகராட்சி, வீரபாண்டியை அருகேயுள்ள வஞ்சி நகரைச் சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர். தங்களது பகுதியிலுள்ளஆக்கிரமிப்பை அகற்றி, வழித்தடத்தை மீட்டுத்தர கேட்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை ஒப்படைப்பதாக கூறினர். பொதுமக்களிடமிருந்து, கலெக்டர் கிறிஸ்துராஜ், மனுவை பெற்றுக்கொண்டு, நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதையடுத்து, பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.வஞ்சிநகர் பகுதி மக்கள் கூறியதாவது:திருப்பூர் மாநகராட்சி, 54வது வார்டு, வஞ்சி நகரில், 400 குடும்பத்தினர், 30 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். பொங்கலுார் ரோட்டிலிருந்து கரட்டுப்பாளையம் பெருமாள் கோவில் செல்லும் வழித்தடம், நீண்ட காலமாக பயன்பாட்டில் உள்ளது. குடிசை மாற்று வாரியம், அடுக்குமாடி குடியிருப்பு கட்டும்போது, 40 அடி அகல ரோட்டை, ஆக்கிரமித்து விட்டனர்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2019, ஆக., 26ல், அப்போதைய கலெக்டரிடம் மனு அளித்ததால், 18 அடி அகல ரோட்டை, வழித்தடமாக வழங்கினர். தார்ரோடும் போடப்பட்டுள்ளது. தற்போது அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள், ரோட்டை அடைக்க முயற்சித்து வருகின்றனர். எங்கள் ஊருக்குச்செல்ல வேறு வழித்தடம் ஏதுமில்லை. வஞ்சி நகர் மக்கள், ரோட்டை நிரந்தரமாக பயன்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். குடிசை மாற்றுவாரியமும், இது பொது வழித்தடம்தான் என, உறுதிமொழி அளிக்கவேண்டும். இல்லாவிடில், தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்.இவ்வாறு அவர்கள் கூறினர். --------------வஞ்சிநகர் பகுதி பொதுமக்கள் வழித்தடம் பிரச்னை தொடர்பாக ஆதார் அட்டை, வாக்காளர் அட்டையை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க வந்திருந்தனர்.