திருப்பூர்:கோடிக்கணக்கில் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட நபரை, திருப்பூர் வழக்கில் விசாரிக்க மூன்று நாள் அனுமதியை கோர்ட் வழங்கியுள்ளது.திருப்பூர் மாவட்டம், காங்கயம், காடையூரை சேர்ந்தவர் தீபக் திலக், 45. பெங்களூரை தலைமையிடமாக கொண்டு 'பி.டி.எம்.,குரூப் ஆப் கம்பெனி' என்ற நெட்வொர்க் மார்க்கெட்டிங் நிதி நிறுவனத்தை துவங்கினார். திருப்பூர், ஈரோடு, சேலம் என, பல இடங்களில் இதன் கிளைகள் துவங்கப்பட்டன. இதில், 2 ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் வரை முதலீடு தொகை செய்தால், குறிப்பிட்ட மாதங்களுக்கு பின், முதலீடு தொகை இரட்டிப்பு செய்து வழங்கப்படும் என்று விளம்பரம் செய்யப்பட்டது.இதை நம்பி, தமிழகம் முழுவதும் பலரும் பணத்தை முதலீடு செய்தனர். கூறியபடி பணத்தை கொடுக்கவில்லை. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்து வருகின்றனர்.கடந்த, 28ம் தேதி பணம் இரட்டிப்பில் ஏமாந்த முதலீட்டாளர்கள் தீபக் திலக்கை பிடித்து சேலம் மாவட்ட போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.கோவையை சேர்ந்த, ஒரே குடும்பத்திடம், 23.23 லட்சம் ரூபாய் ஏமாற்றியதாக திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவில் பதியப்பட்ட வழக்கில், கடந்த, 31ம் தேதி இவரை போலீசார் கைது செய்தனர். அவரை கஸ்டடி எடுத்து விசாரணை நடத்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், கோவையில் உள்ள தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நல பாதுகாப்பு சிறப்பு கோர்ட்டில் விண்ணப்பித்தனர்.கோர்ட் அனுமதியோடு, நேற்று முதல், மூன்று நாள் போலீஸ் கஸ்டடி எடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, அவரிடம் விசாரித்தால் மட்டுமே திருப்பூர் மாவட்டத்தில் நடந்த மோசடிகள் குறித்து தெரிய வரும்.இந்நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்து, இதுவரை புகார் கொடுக்காமல் இருப்பவர்கள், திருப்பூர் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளிக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.