திருப்பூர்;திருப்பூர் நகரப் பகுதியில் கட்டுப்பாடின்றி சுற்றித் திரியும் கால்நடைகள் அச்சுறுத்தும் வகையில் உள்ளன. அசம்பாவிதம் ஏற்படும் முன் மாநகராட்சி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருப்பூர் மாநகராட்சி முக்கிய வீதிகளில் மாடுகள், கன்றுக்குட்டிகள், ஆடுகள் எந்த கட்டுப்பாடுமின்றி சுற்றித் திரிகின்றன. குறிப்பாக, ஈஸ்வரன் கோவில் வீதி, முனிசிபாலிடி வீதி, நொய்யல் வீதி, செல்லாண்டியம்மன் துறை ஆகிய பகுதிகளில் ரோடுகளில் மாடுகள் அதிகளவில் சுற்றி வருகின்றன.இதன் உரிமையாளர்கள் யார் என்பது தெரியவில்லை. இது தவிர நொய்யல் கரையை ஒட்டி அமைந்துள்ள பகுதிகளிலும், ஆற்றுக்குள்ளும் ஏராளமான மாடு, எருமை போன்றவையும் தென்படுகின்றன. இந்த கால்நடைகள் பிரதான ரோடுகளிலும், குறுக்கு ரோடுகளிலும் இஷ்டம் போல் வலம் வருகின்றன. அதிகாலை நேரங்களில் இவற்றில் சில முக்கிய ரோடுகளின் மையத்தில் படுத்துக் கொள்கின்றன. நெருக்கடி மிகுந்த ரோடுகள், பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் நடந்து செல்லும் ரோடுகள், விளையாடும் பகுதிகளிலும் சில நேரங்களில் மாடுகள் சுற்றுவதால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அச்சத்துடன் இவற்றைக் கடந்து செல்லும் நிலை உள்ளது. சில நேரங்களில் ஒன்றோடொன்று சண்டையிட்டும் கொள்கின்றன. பொதுமக்கள் சிலர் கூறியதாவது:திருப்பூரில் உள்ள சில இறைச்சி வியாபாரிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்காமல், தீவனம் கூட கொடுக்காமல் தெருவில் சுற்ற விடுகின்றனர். இதனால், அவை ஆங்காங்கே கிடைக்கும் எச்சில் இலைகள், உணவுக்கழிவுகள் ஆகியவற்றையும், ரோட்டோரம் முளைக்கும் செடிகளையும் உட்கொண்டு ரோட்டில் சுற்றுகிறது. சென்னை மாநகராட்சி பகுதியில் அடிக்கடி மாடுகள் முட்டுவது, பொதுமக்களை விரட்டிச் சென்று மோதி காயப்படுத்துவது போன்றவை நடக்கிறது. இதனால், மாடுகளை பிடித்தும், அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையும் மேற்கொண்டனர். எனவே, திருப்பூரிலும் சுற்றித்திரியும் மாடுகளை கட்டுப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். ----திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன் உள்ள ரோட்டில், சுற்றித் திரியும் மாடுகள்.