திருப்பூர், : திருப்பூர் மாநகர போலீசில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன. குற்றச்செயல்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.திருப்பூர் மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வடக்கு, தெற்கு, திருமுருகன்பூண்டி, வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், நல்லுார், சென்ட்ரல், வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷன்கள், தலா, இரண்டு மகளிர் மற்றும் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. மாநகரில் உள்ள போலீஸ் ஸ்டேஷன்களில், சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு என, இரு பிரிவுகள் உள்ளன. இவற்றுக்கென தனியாக இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர்.தொடரும் குற்றங்கள்தினமும் மொபைல் போன் பறிப்பு, டூவீலர் திருட்டு என, பொதுமக்கள் புகாருக்கு ஸ்டேஷனை நாடி செல்கின்றனர். போலீசார் பற்றாக்குறையால், வழக்கு பதியாமல் வாங்கி வைத்து அனுப்பி விடுகின்றனர். இல்லையென்றால், சி.எஸ்.ஆர்., உடன் நிறுத்தி விடுகின்றனர். இவ்வாறு தொடரும் திருட்டு, வழிப்பறி போன்றவை மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.போலீஸ் பற்றாக்குறை
ஒவ்வொரு குற்றப்பிரிவிலும், சொற்ப இலக்கில் மட்டுமே போலீசார் பணியில் உள்ளனர். அவர்களில் சிலர் விடுப்பு, வேறு பணிகளுக்கு செல்லும் போது, பணியில் போலீசார் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதை சமாளிக்க முடியாமல் அவ்வப்போது, சம்பந்தப்பட்ட ஸ்டேஷனை சேர்ந்த இன்ஸ்பெக்டர்களும் விடுப்பில் கிளம்பிச்சென்று விடுகின்றனர்.வேறு ஸ்டேஷனை சேர்ந்த இன்ஸ்பெக்டர் கூடுதலாக கவனிக்கும் சூழல் ஏற்படுகிறது. குறிப்பாக, இன்ஸ்பெக்டர்கள் வேறு பணிகளுக்கு செல்லும் போது, வரும் புகார்களை விசாரிக்க எஸ்.ஐ.,களும் இருப்பதில்லை.ஓய்வு பெறும் நிலையில் உள்ள எஸ்.ஐ.,களே பணியில் உள்ளனர். ஒவ்வொரு ஸ்டேஷனிலும் நிலவும் போலீசார் பற்றாக்குறையால், ஒரு போலீசாரே பல பணிகளையும் பார்க்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளுடன் குற்றப்பிரிவு இயங்கி வருவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இதுதவிர ரோந்து மேற்கொள்ள சுழற்சி முறையில் போலீசார் நியமிக்கப்பட்டாலும், அவர்கள் முறையாக ரோந்து மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.பிரச்னைகளை களைய மாநகர போலீஸ் கமிஷனர் ஸ்டேஷன்களில் ஆய்வு மேற்கொண்டு, கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும்.
குற்றம் தடுக்க நடவடிக்கை
குற்றங்களை தடுக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். குற்ற வழக்குகளை கண்டுபிடிக்க தனிப்படையும் உள்ளது. தேர்தல் பணி காரணமாக, ஸ்டேஷனில் போலீஸ் பற்றாக்குறை இருந்து இருக்கலாம். தற்போது, அனைத்தும் சரி செய்யப்பட்டுள்ளது. மக்களின் புகார்களுக்கு விசாரித்து நடவடிக்கை எடுக்க இன்ஸ்பெக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.- பிரவீன்குமார் அபிநபு, போலீஸ் கமிஷனர்