| ADDED : ஆக 18, 2024 02:21 AM
திருப்பூர்:ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கொலை மிரட்டல் கடிதம் வந்துள்ளது; உரிய விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில்வேல் கேட்டுக்கொண்டுள்ளார்.அவரது அறிக்கை:ஹிந்து முன்னணி மாநில தலைவரை கொலை செய்ய போவதாக சில தினங்களுக்கு முன், பழநி பா.ஜ., அலுலகத்துக்கு கொலை மிரட்டல் கடிதம் வந்தது. கடிதத்தின் முழு தன்மை குறித்து விசாரிக்காமல், இவ்விஷயத்தை மூடி மறைக்க தமிழக அரசு முயற்சி செய்வதாக தெரிகிறது. தமிழகத்தில் இன்று சட்டம் ஒழுங்கு நிலைமை மிக மோசமாக உள்ளது. தினமும் கூலிப்படைகள் மூலமாக அரசியல் தலைவர்கள், சமுதாய பணி செய்து வருபவர்கள், மக்கள் என்று பட்டப் பகலில் கூட போலீசாரை கண்டு அஞ்சாமல் தமிழகம் முழுவதும் கொலைகளை நிகழ்த்தி வருகின்றனர். கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸ்துறையின் கைகள் கட்டப்பட்டுள்ளது. வடக்கு மாவட்ட பா.ஜ., கடும் கண்டனத்தை தெரிவிக்கிறது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி உண்மை நபர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.