உடுமலை;உடுமலை அருகே, கிடப்பில் போடப்பட்டிருந்த ரோடு சந்திப்பு மேம்பாட்டு பணிகள், தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.உடுமலையில் இருந்து திருமூர்த்திமலை, அமராவதி அணை, மறையூர், மூணாறு செல்லும் ரோடு, மாவட்ட முக்கிய ரோடுகள் பிரிவின் கீழ், நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படுகிறது.போடிபட்டி அருகே, வாளவாடி மற்றும் குரல்குட்டை கிராம இணைப்பு ரோடுகள், திருமூர்த்திமலை ரோட்டில் இணைகிறது.இணைப்பு ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள் பிரதான ரோட்டில் இணையும் போது, குளறுபடி ஏற்பட்டு, விபத்துகள் ஏற்படும் அபாயம் இருந்தது.இப்பகுதியில், விபத்துகளை தவிர்க்க, சந்திப்பு பகுதி மேம்பாடு செய்யும் வகையில், நெடுஞ்சாலைத்துறை சார்பில், கருத்துரு அனுப்பப்பட்டது.அதன்படி, ரோடு சந்திப்பு விரிவாக்க மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், 3 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி, நெடுஞ்சாலைத்துறை சார்பில், பணிகள் கடந்தாண்டு இறுதியில் துவங்கியது.இத்திட்ட பணிகளுக்காக அங்கிருந்த, புளியமரங்கள் வெட்டி அகற்றப்பட்டது. அதன்பின்னர், பணிகளில், சுணக்கம் நிலவியது. இருபுறங்களிலும் விரிவாக்கத்துக்காக குழி எடுக்கப்பட்ட நிலையில், தார் அமைக்கும் பணி தாமதமானது.இதனால், அப்பகுதியில் புழுதி பறந்து வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர். சுணக்கம் நிலவிய பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளது.'இத்திட்டத்தில், திருமூர்த்திமலை ரோடு, குறிப்பிட்ட துாரம் விரிவாக்கம் செய்யப்பட்டு, சென்டர்மீடியன் அமைக்கப்படும். இதனால், இணைப்பு ரோட்டில் இருந்து வரும் வாகனங்கள், பிரதான ரோட்டில் எளிதாக இணைந்து செல்ல முடியும்,' என நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.இதே போல், செங்குளம் அருகே ரோடு விரிவாக்கப்பணிகள் துவங்கியுள்ளன.