உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொடர்ந்து குறைந்து வரும் பசுமை பரப்பு; நெடுஞ்சாலைகளில் தேவை மரம் வளர்ப்பு!

தொடர்ந்து குறைந்து வரும் பசுமை பரப்பு; நெடுஞ்சாலைகளில் தேவை மரம் வளர்ப்பு!

பல்லடம்: இன்றைய சூழலில், உலக வெப்பமயமாதல் என்பது சர்வதேச அளவில் மிகப் பெரும் பிரச்னையாக உள்ளது.நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன பெருக்கம், மக்கள் தொகை ஆகியவற்றால் புவி வெப்பமடைதல் மற்றும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக பருவ நிலைகளும் மாறுகின்றன. பருவம் மாறி மழை பெய்வது, அதிகரிக்கும் வெப்பநிலை ஆகியவையும் பாதிப்புகளை எடுத்துக்காட்டுகின்றன.இதில் இருந்து தப்பிக்க உலக நாடுகள் அனைத்தும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.இதற்கு, மரம் வளர்ப்பு என்பது மிக முக்கிய தீர்வாக கருதப்படுகிறது. வாகன பெருக்கத்துக்கு ஏற்ப ரோடு வசதி, மக்கள் தொகைக்கு இணையான கட்டடங்களின் பெருக்கம் ஆகியவை காலத்தின் கட்டாயமாக உள்ளது. இவ்வாறு, வாகன பெருக்கத்துக்கு ஏற்ப ரோடு விரிவாக்கம் செய்யப்படும்போது, எண்ணற்ற மரங்கள் அழிக்கப்படுகின்றன. மேலும், கட்டுமான பணிகள், குழாய் பதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களாலும் மரங்கள் அழிக்கப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.இவ்வாறு, வெட்டி அழிக்கப்படும் மரங்களுக்கு இணையாக வளர்க்கப்படும் மரங்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. ஒரு மரம் வெட்டப்பட்டால் அதற்கு இணையாக ஐந்து மரக்கன்றுகளை நட வேண்டும் என கோர்ட் அறிவுறுத்துகிறது.மேலும், மரங்களை வெட்டுவதற்கு உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலை, வனத்துறை, வருவாய் துறை உள்ளிட்டவற்றில் உரிய அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த விதிமுறைகளை பொதுமக்களும் பின்பற்றுவதில்லை; அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை. இதனால், வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை பெரும்பாலும் கணக்கிலேயே வருவதில்லை.

பூங்கா எங்கே?

புதிதாக வைக்கப்படும் மரங்களை காட்டிலும், வெட்டி வீழ்த்தப்படும் மரங்களின் எண்ணிக்கையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம், தேசிய மாநில நெடுஞ்சாலைகளில், சாலை ஓரப் பூங்காக்கள் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படும். ஆனால், இன்று அது போன்ற பூங்காக்களையே பார்க்க முடிவதில்லை.மேலும், ரோடு விரிவாக்கத்துக்காக மரங்களை வெட்டும் அதிகாரிகள், நெடுஞ்சாலைத் துறையின் கட்டுப்பாட்டில் போதிய இடங்கள் இருந்தும், மரங்களை வளர்க்க ஆர்வம் காட்டுவதில்லை. வெட்டப்படும் மரங்களை மாற்று இடத்தில் நடவு செய்வதற்கான தொழில் நுட்பங்கள் எப்போதோ வந்து விட்டன. இத்தொழில்நுட்பத்தை பின்பற்றி தன்னார்வ அமைப்பினர், தன்னார்வலர்கள் எண்ணற்ற மரங்களை மறு நடவு செய்து அவற்றுக்கு வாழ்வளித்துள்ளனர்.ஆனால், அரசு அதிகாரிகள் மட்டும் ஏனோ இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த மறுக்கின்றனர். அசோகர் காலத்தில் மரங்கள் வைக்கப்பட்டதும், அவற்றின் மூலம் பொதுமக்கள் பயனடைந்ததையுமே இன்று வரை பேசி வருகிறோம். பல ஆண்டுகளுக்கு முன் வைக்கப்பட்ட மரங்களே, நெடுஞ்சாலைகளில் இன்றும் நிழல் தந்து வருகின்றன.அதன்பின்னரே, மரம் வளர்ப்பில் அதிகாரிகள் செய்த சாதனைதான் என்ன என்ற கேள்வி எழுகிறது. எனவே, தேசிய மாநில நெடுஞ்சாலைகளில் பசுமை பரப்பளவை அதிகப்படுத்த வேண்டியது அவசியம். இனியும் விழித்துக் கொள்ளாவிட்டால், பூமியை காப்பாற்ற யாராலும் முடியாது என்பதை அதிகாரிகள் உணர்வது எப்போது என்றுதான் தெரியவில்லை.புதிதாக வைக்கப்படும் மரங்களை காட்டிலும், வெட்டி வீழ்த்தப்படும் மரங்களின் எண்ணிக்கையே நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ